உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 4305 பேர் பதிவு: புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை வழங்க அறிவுரை

நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 4305 பேர் பதிவு: புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை வழங்க அறிவுரை

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு 4305 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2142 பேர் மட்டுமே விண்ணப்பத்தினை முறையாக பூர்த்தி செய்து, சமர்பித்துள்ளனர்.புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளில் மொத்தம் 9,993 சீட்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு www.centacpuducherry.inஎன்ற சென்டாக் இணையதளத்தில் கடந்த 8 ம்தேதி முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பிக்க 22ம் தேதி கடைசி நாளாகும். நேற்று வரை 4305 பேர் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2142 பேர் மட்டுமே விண்ணப்பத்தினை முறையாக பூர்த்தி செய்து, சமர்பித்துள்ளனர்.

பதிவு செய்யும்போது...

ஆன் லைனில் விண்ணப் பிக்கும்போது மொபைல், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக ஆன் லைனில் விண்ணப்பிக்க புதிதாக பதிவு செய்யும்போது, பயன்பாட்டில் உள்ள மொபைல் எண், இ-மெயில் முகவரியை தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.பதிவு செய்ய இந்த மொபைல் எண்ணிற்கு ஒவ்வொரு முறையும் டேஸ்போர்டில் நுழையும் போது ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்டு அனுப்பப்படும். எனவே மாணவர்கள் தாங்கள் கொடுக்கும் மொபைல் எண், இமெயில் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை அறிந்து, கவனமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்

மாணவர்கள் தங்களுடைய சாதி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அசல் சான்றிதழ்களை கல்லுாரியில் சீட் கிடைத்த பிறகு சமர்பித்தால் போதும் என அறிவுறுத்தியுள்ளது. நீட் அல்லாத படிப்பு களுக்கு 4305 பேர் விண்ணப்பிக்க பதிவு செய்திருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்பிக்கவில்லை. இந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு,சீட் ஒதுக்க முடியாது என்பதால், புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் பதிவேற்றம்

மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைனில் சரியான அளவில் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சென்டாக் அறிவுரை வழங்கியுள்ளது.மாணவர் புகைப்படம், மாணவரின் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து 20 முதல் 50 கே.பி., அளவுக்குள் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், மாற்று சான்றிதழ், நீட், ஜே.இ.இ., ஸ்கோர், மதிப்பெண் சான்றிதழ், குடியிருப்பு, சாதி, இ.டபுள்யூ.எஸ்., உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் அனைத்தும் 100 முதல் 500 -கே.பி., வரை அளவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விளையாட்டு பிரிவு

இதேபோல் விளையாட்டு வீரர் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித் துள்ள புதுச்சேரி மாணவர்கள், அதை நகல் எடுத்து, சுயகையொப்பமிட்டு, கருவடிக்குப்பத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்திலும், காரைக்கால் பிராந்திய மாணவர்கள், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சென்டாக் உதவி மையத்திலும் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என சென்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்