| ADDED : ஜன 25, 2024 06:30 AM
பாகூர் : புதுச்சேரியில் கார் கவிழ்ந்து சென்னையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் இறந்தார். 7 பேர் காயமடைந்தனர்.சென்னை அத்திபட்டு, புது நகரைச் சேர்ந்தவர் சந்திரன்,50; சென்னையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி பார்வதி, 48; உடன் தனது ஸ்கார்பியோ காரில் (டி.என் 22 எ.ஒய். 1400) புதுச்சேரி, வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.காரை சென்னை கொருக்குபேட், ஜெ.ஜெ. நகரை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஓட்டி வந்தார். பின்னர், வேல்ராம்பட்டில் உள்ள உறவினர்களான சுகாசினி,26; காயதிரி,23; தனலட்சுமி,70; செல்வி, 45; சிறுமி லோஷிணி, 5; ஆகியோருடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று நேற்று அதிகாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அரியாங்குப்பம் புறவழிச் சாலை வந்தபோது, கார் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த கழிவுநீர் வாய்க்கால் கட்டையில் மோதி கவிழ்ந்தது. அதில் சந்திரன் உட்பட காரில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயம் அடைந்த சந்திரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர் உட்பட 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.