| ADDED : நவ 22, 2025 05:39 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் 2 பெண்கள் உட்பட 8 பேர் ரூ.10.35 லட்சம் ஏமாந்துள்ளனர். முத்தியால்பேட்டையை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியதுடன், அது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில், இணைத்துள்ளார். அந்த குரூப்பில் இருந்தவர்கள் தங்களுக்கு அதிக லாபம் வருவதாக பதிவிட்டனர். இதைநம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் ரூ. 5 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்து, அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. இதேபோல், முத்தியால்பேட்டை நபர்கள் 85 ஆயிரம் மற்றும் 73 ஆயிரத்து 589, ரெட்டியார்பாளையம் நபர் 24 ஆயிரம், நெல்லித்தோப்பைச் சேர்ந்தவர் ஒரு லட்சத்து 40 ஆயிரம், சண்முகபுரம் நபர் 55 ஆயிரம், திப்புராயப்பேட்டையை சேர்ந்த பெண் 37 ஆயிரத்து 585, வில்லியனுாரை சேர்ந்த பெண் 25 ஆயிரத்து 587 ஆகிய 8 பேர் 10 லட்சத்து 35 ஆயிரத்து 761 ரூபாயை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.