உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி சட்டசபை நிகழ்ச்சி சட்டசபை நிகழ்வை கண்முன் கொண்டு வந்தனர்

அரசு சட்ட கல்லுாரியில் மாதிரி சட்டசபை நிகழ்ச்சி சட்டசபை நிகழ்வை கண்முன் கொண்டு வந்தனர்

புதுச்சேரி: அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த மாதிரி சட்டசபையில் மக்கள் பிரச்னைகள் தொடர்பான விவாதம் அனல் பறந்தது.புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, தேர்தல் துறையுடன் இணைந்து மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான மாதிரி சட்டசபையை நடத்தியது.புதுச்சேரியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் சட்டசபை மாதிரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மாணவர்களில் இருந்து மாதிரி புதுச்சேரி சட்டபைக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் என, 33 எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களில் முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டு, அசல் சட்டசபை போன்று சட்டசபை கூட்டத் தொடர் நடத்தப்பட்டது.இதில் மக்கள் பிரச்னைகளை முன் வைத்த எதிர்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்களால் மாதிரி சட்டசபையில் அனல் பறந்தது. இறுதியில் சட்டசபை பல்கலைக்கழகம் சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. மொத்த நிகழ்வும் அசல் சட்டசபை நிகழ்வினை மாணவர்கள் கண்முன் கொண்டு வந்தனர். இதில் எம்.எல்.ஏ.,வாக சிறந்த கருத்துகளை முன் வைத்த மணக்குளவிநாயகர் சட்ட பள்ளி மாணவர் ராம்குமாருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. சட்ட அமைச்சராக எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளை திறமையாக எதிர்கொண்டு பதிலளித்த பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மாணவி பவிகீர்த்தனாவுக்கு இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், சபாநாயகராக திறம்பட சபையை வழி நடத்திய பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மாணவி மஞ்சுக்கு மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர்கள் துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல், சட்டசபை செயலர் தயாளன், உயர் கல்வி துறை இயக்குனர் அமன் சர்மா, தேர்தல் அதிகாரி ஆதர்ஷ், நுகர்வோர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோகன், வழக்கறிஞர் ரீனா ஐஸ்வர்யா, கல்லுாரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் மாதிரி சட்டசபையில் சிறந்த விவாதத்தை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !