5 ஆண்டு கால அரசினை நிறைவு செய்ய அ.தி.மு.க., அன்பழகன் வேண்டுகோள்
புதுச்சேரி: முதல்வர் 5 ஆண்டு கால அரசை நிறைவு செய்ய வேண்டியது கடமையாகும் என, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:இந்தியா கூட்டணி பந்த் போராட்டம் பிசுபிசுத்து உள்ளது. இருந்தாலும் மக்களுடைய சகஜ வாழ்வு பல இடங்களிலும் பாதித்துள்ளது. இந்த பந்த் போராட்டம் புதுச்சேரி காவல்துறையினரும், மாவட்ட கலெக்டரின் பொறுப்பற்ற செயலாலுமே நடந்துள்ளது. பந்த் அறிவிப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறை கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது.மாநிலத்தில் தி.மு.க., காங்., கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை புதுச்சேரி காவல்துறை எடுத்துள்ளது. நடப்பது பா.ஜ.,கூட்டணி அரசா அல்லது தி.மு.க., காங்., கூட்டணி அரசா என சந்தேகம் ஏற்படும் அளவில் அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பந்துக்கு ஆதரவாக செயல்பட்டனர்.இது குறித்து கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.கடந்த தி.மு.க., காங்., அரசை வீட்டுக்கு அனுப்பிய மக்கள்முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 5 ஆண்டு காலம் ஆட்சி அமைக்க ஓட்டளித்தனர்.மக்கள் நமக்கு ஓட்டளித்து 5 ஆண்டு கால அரசை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டியது முதல்வர் கடமையாகும். மீண்டும் அ.தி.மு.க., பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணியில் முதல்வராக மறுபடியும் ரங்கசாமி வருவார்.இவ்வாறு அவர், கூறினார்.