புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று குடோன்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பல கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் சிக்கியுள்ளது. இந்தியாவில் மருந்து தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான 'சன் பார்மசி' நிர்வாகம், தாங்கள் உற்பத்தி செய்யும் பல்வேறு மருந்துகள் புதுச்சேரியில் தயாரிக்கப்படுவதாக சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலி மருந்து தயாரிப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 12ம் தேதி வழக்கு பதிந்து, போலி லைசன்ஸ் தயாரித்தது தொடர்பாக காரைக்குடியை சேர்ந்த ஏ.கே.ராணா,45; மெய்யப்பன்,46; ஆகியோரை கடந்த 18 மற்றும் 21ம் தேதிகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் போலி லைசென்ஸ்களை பயன்படுத்தி புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனைக்கு அனுப்புவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, டி.ஐ,ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., சுருதி, சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி, புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர், ஆண்டோ உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை குருமாம்பேட்டில் ஒரு குடோனிலும், மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் உள்ள இரு குடோன்களிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நீடித்த அதிரடி சோதனையில் மூன்று குடோன்களிலும் போலி மருந்துகள் தயாரித்து, அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த மருந்துகள், அதற்கான மூலப் பொருட்களை மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும், போலி மருந்து தயாரிப்பிற்கு பயன்படுத்திய இயந்திரங்கள், அது தொடர்பான பலமுக்கிய ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மருந்துகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி கூறுகையில், 'போலி மருந்து தயாரிப்பதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்தி மருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம். அது என்னென்ன மருந்துகள், அவை காலாவதியானவையா என்பது ஆய்விற்கு பிறகே தெரிய வரும்' என்றார். போலீசார் கூறுகையில், 'தற்போது மூன்று குடோன்களை மட்டுமே ஆய்வு செய்துள்ளோம். மேலும், சில குடோன்களை ஆய்வு செய்ய உள்ளோம். இதற்கான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர். புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொடர்பாக கடந்த செப்., 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.