ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் பச்சை பட்டாணிக்கு தனி இடம் உண்டு. நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் என பல சத்துக்களை பச்சை பட்டாணி கொண்டுள்ளது. சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும், பாக்கெட்டுகளில் விற்கப்படும் பச்சை பட்டாணியை பிரித்து கொஞ்சம் போட்டால் அதன் மணமும், சுவையும் அதிகரிக்கும்.இந்நிலையில், மனிதர்களின் பேராசையால், பச்சை நிற பட்டாணியில் மிகப்பெரிய ஆபத்து பதுங்கி இருக்கிறது. பச்சை பட்டாணியை இன்னும் பச்சை பசேலென காட்டுவதற்காக மாலாசைட் கிரீன் என்ற ரசாயனத்தை பட்டவர்த்தனமாக கலந்து விற்கின்றனர்.இதற்காக, உலர்ந்த பட்டாணியை நீரில் ஊறவைத்து விடுகிறார்கள். அதில், மாலாசைட் கிரீன் ரசாயனத்தை கலந்து நிறமேற்றுகிறார்கள். உலர்ந்த பட்டாணி மட்டுமல்ல, உலராத வகையிலும்கூட இந்தக் கலப்படம் நடக்கிறது. பச்சை பட்டாணியை தொட்டாலேயே கையில் பச்சை நிறம் ஒட்டுகிறது.நுகர்வோர் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது,'சில நாடுகளில் விஷக் காளான்களைக் கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனம் மாலாசைட் கிரீன். ஆனால், 1900ம் ஆண்டே இந்த ரசாயனம், உலக அளவில் தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால், இதைத்தான் இன்றைக்கு பட்டாணிக்குப் பளிச் பச்சை தர, நிறமேற்றியாக பயன்படுத்துகின்றனர்.இதன் காரணமாக புற்றுநோய் வரக்கூடிய அபாயம் உண்டு. மரபணுக்களில் மாற்றங்கள் நிகழலாம்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்பு உண்டு' என்று எச்சரிக்கின்றனர்.பஞ்சு மிட்டாய் விஷயத்தில் காட்டிய அதிரடியை பச்சை பட்டாணி விஷயத்திலும் உணவு பாதுகாப்பு துறை காட்ட வேண்டும்.
கலப்படத்தை கண்டறிவது எப்படி?
ஒரு கைப்பிடி பச்சை பட்டாணியை எடுத்து, ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி, அதில் பட்டாணியை போடுங்கள். மாலாசைட் கிரீன் கலந்து இருந்தால், சில நிமிடங்களில் அதிலிருந்து பச்சை நிறம் பிரிந்து நான் கலப்படம் தான் என, காட்டிவிடும்.