உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொங்கல் பரிசுக்கு பதில் பணம் வழங்க முடிவு: வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

பொங்கல் பரிசுக்கு பதில் பணம் வழங்க முடிவு: வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க 238 கோடியே 92 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பரிசு குறித்து எந்த அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் உள்ளது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்குவதாக இருந்தால் டிசம்பர் மாதமே பரிசு பொருட்களை கொள்முதல் செய்யும் டெண்டருக்கான பணிகளை குடிமை பொருள் வழங்கல் துறையால் சுட்டிக் காட்டப்பட்ட அரசு சார்பு நிறுவனம் துவக்கி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான எந்த பணிகளையும் அரசு துவக்கவே இல்லை.பொங்கல் பண்டிக்கைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள சூழ்நிலையில் பொங்கல் பரிசு பொருட்களை கொள்முதல் செய்து வழங்க நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக கடந்தாண்டை போலவே இந்தாண்டு பணமாகநேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

ஆலோசனை

கடந்தாண்டும்பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதில் பயனாளிகள் வங்கி கணக்கில் 500 ரூபாய் செலுத்தப்பட்டது. தற்போது பொங்கல் பரிசுக்கான தொகையை உயர்த்தி கொடுப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது.நிதி நெருக்கடி உள்ள சூழ்நிலையில், நிதித் துறையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஓரிரு தினங்களில் இறுதி முடிவெடுத்து கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது.

காலத்தோடு

பொங்கல் பரிசு தொகுப்பிற்கான நிதியை காலம் கடந்து வழங்காமல், பொங்கல் பண்டிக்கைக்கு முன்பே வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி, துறை அமைச்சர் சாய்சரவணன்குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.எனவே ஒப்புதல் கிடைத்ததும், உடனடியாக வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையை செலுத்தவும் குடிமை பொருள் வழங்கல் துறை ரெடியாகி வருகின்றது.

எவ்வளவு செலவாகும்

புதுச்சேரி பிராந்தியத்தில் 2,67,005 ரேஷன் கார்டுகள், காரைக்காலில் 61,664, மாகியில் 8,534, ஏனாமில் 16,046 என, மாநிலம் முழுதும் 3,53,249 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்தாண்டை போல 500 ரூபாய் பொங்கல் பரிசாக அரசு வழங்கினால், 17 கோடியே 66 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். பொங்கல் பரிசு தொகையை உயர்த்தினால் அரசிற்கு சில கோடிகள் கூடுதலாக செலவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை