| ADDED : செப் 07, 2026 11:14 PM
புதுச்சேரி: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்த சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து 5 நாள் காவலில் எடுத்தனர். லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் பி.எஸ்.என்.எல். ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன், 70. இவர் கிரிப்டோ கரன்சியில் 98 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். அதன் மூலம் வந்த ரூ. 2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை, விற்று பணமாக வங்கி கணக்குக்கு மாற்ற முயற்சித்தபோது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரியைச் சேர்ந்த 9 பேர் ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ. 2.50 கோடியை இழந்ததும், இந்தியா முழுதும் ரூ. 100 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து ஒரே நாளில் கிரிப்டோ கரன்சியை மதிப்பில்லாமல் செய்து பணத்தை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் கோயம்புத்துாரை சேர்ந்த நித்தீஷ்குமார், 36; அரவிந்த்குமார், 40; ஆஷ்பே இணையதளம் உருவாக்கிய தாமோதரன், 52; அலுமினிய பொருட்கள் தயாரிப்பு நிறுவன இயக்குநர் பாபு என்ற சையது உஸ்மான், 51; தொழிலதிபரான இம்ரான் பாஷா, 37; உள்ளிட்ட 9 பேரை கைது செய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கிரிப்டோ கரன்சி வழக்கில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதால், அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்து புதிதாக வழக்குப் பதிந்துள்ளது. இதையடுத்து, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கில் தொடர்புடைய கோயம்புத்துாரைச் சேர்ந்த நித்தீஷ்குமார், 36; இம்ரான் பாஷா, 45; ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை புதுச்சேரி முதன்மை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், குற்றவாளிகளான நித்தீஷ்குமார் மற்றும் இம்ரான் பாஷா ஆகியோரை வரும் 12ம் தேதி வரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். தொடர்ந்து, அமலாக்கத்துறை சென்னை மண்டல துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் மாலிக் தலைமையிலான குழுவினர் 2 பேரையும் கோர்ட்டில் இருந்து நேரடியாக சென்னைக்கு அழைத்து சென்றனர். இதில், அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் வினோபிரியங்கா ஆஜரானார்.