உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
காரைக்கால்: காரைக்காலில் உரம் தட்டுப்பாட்டை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காரைக்கால், நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட வடமட்டம், புத்தக்குடி, மேலகாசாகுடி, நல்லாத்துார் பகுதியில் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். பயிர் சாகுபடி சான்றிதழ் பெறுவதற்கு வருவாய் அதிகாரியை பணி அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நேற்று காலை சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட் ட விவசாயிகளிடம் சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., தாசில்தார் சண்முகநாதன் ஆகியோர், பேச்சு வார்த்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று 11:30 மணிக்கு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.