| ADDED : டிச 20, 2025 06:25 AM
புதுச்சேரி: புது பஸ் ஸ்டாண்டில் எஸ்கலேட்டருடன் கூடிய நவீனநடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள நடைபாதை மேம்பாலம் பயனற்ற நிலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சமூக விரோதிகள் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள்விற்கின்றனர். இரவில் குற்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் வருபவர்கள் அச்சமடைகின்றனர். இந்த மேம்பாலத்தால் போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. அகலமான மறைமலை அடிகள் சாலையில், மேம்பால பகுதி குறுகி உள்ளதால், வாகனங்கள் வளைந்து நெலிந்து செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் இப்பகுதியில் விபத்துகள் நடக்கிறது. கடந்த மாதம் 4ம் தேதி இரவு சுற்றுலா வந்த மருத்துவ மாணவி வந்த வாகனம் மேம்பாலத்தில் மோதி உயிரிழந்தார்.மேம்பாலத்தின் கீழ் உள்ள உணவகங்களில் கழிவுகள் கொட்டி வைக்கும்இடமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத நடைபாதை மேம்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, மக்கள் எளிதாக பயன்படுத்தும் விதமாக எஸ்கலேட்டருடன் கூடிய நவீன நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.