புதுச்சேரி: மத்திய அரசின் அனுமதி இல்லாமல் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் அமைச்சர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவேகானந்தன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் மாவட்ட பொறுப்பில் இருந்தவர். அதற்கு பிறகு, என்.ஆர்.காங்., ஆதரவாளராக மாறியவர். அவருக்கு, பா.ஜ., மற்றும் என்.ஆர்., காங்., பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.அவரை விசாரித்தால், புதுச்சேரிக்கு கஞ்சா எங்கிருந்தெல்லாம் கொண்டு வரப்படுகிறது என்கிற விவரம் தெரியும். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.முதல்வர் ரங்கசாமி, ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களை எல்லாம் மீண்டும் திறக்கிறார். இது கேலிக்கூத்தானது. புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு 'வந்தே பாரத்' ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.லோக்சபா தேர்தலில், புதுச்சேரி தொகுதியில் போட்டியிட, பா.ஜ., வில் சீட் கேட்பவர்களிடம், 50 லட்சம் பேரம் பேசப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு, இந்த தேர்தலில் போட்டியிட, இன்னமும் வேட்பாளர் கிடைக்கவில்லை என்பது பரிதாபமாக உள்ளது.புதுச்சேரி அமைச்சர் ஒருவர் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். மத்திய அரசின் அனுமதி இல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். அவர், 17 முறை சிங்கப்பூருக்கும், 13 முறை மலேசியாவிற்கும், 11 முறை துபாய்க்கும் சென்றுள்ளார்.ஒரு அமைச்சர் வெளிநாடு செல்ல வேண்டும் எனில், வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் சென்ற அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவர் வெளிநாடுகளுக்கு செல்வது மர்மமாகவே இருக்கிறது. இது சம்மந்தமாக உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும். இந்த காரணத்திற்காகவே, அவரை அமைச்சரவையில் இருந்து பதவி நீக்க செய்ய வேண்டும்.புதுச்சேரியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு 'இரிடியம்' கடத்தப்படுவதாக, தகவல் வெளியாகி உள்ளது. பதவியில் இருப்பவர்கள் சிலர், பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க, வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறுகின்றனர். இது குறித்த விவரங்களை, நாங்கள் திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.