| ADDED : நவ 22, 2025 05:38 AM
புதுச்சேரி: ரவுடிகள், கந்துவட்டி மற்றும் கஞ்சா கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதனிடம் முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: முத்தியால்பேட்டை தொகுதியில் ரவுடிகள் மாமுல் கேட்டு வணிகர்களை மிரட்டுகின்றனர். சட்ட விரோத கந்து வட்டி தொழில், கஞ்சா, போதை வஸ்துக்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. இதனால் சிறுவணிகத்தில் ஈடுபடுவோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில நபர்கள் இங்கு வீடு எடுத்து தங்கி, கந்து வட்டி தொழில் செய்கின்றனர். நாள் வட்டி, மீட்டர் வட்டி என தினசரி, வாராந்திர வசூல் என சட்ட விரோதமாக கந்து வட்டி வசூலிக்கின்றனர். தமிழகத்தில் உள்ளது போல், புதுச்சேரியிலும் கந்து வட்டி தொடர்பான சட்டம் இயற்ற வேண்டும். ரவுடிகளின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்து வியாபாரிகள் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய உதவ வேண்டும். கஞ்சா நடமாட்டத்தை ஒழித்து பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். அனைத்தையும் ஒழித்து சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.