| ADDED : பிப் 29, 2024 05:51 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்களின் பேரணி நடந்தது. புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளை, அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் ஒரு சில தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் நிறுவன ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதற்கான கையெழுத்து இயக்கம் நடத்தி, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி பேரணி நடந்தது.பேரணி நேற்று மாலை 5:00 மணிக்கு சுதேசி பஞ்சாலையில் எதிரில் இருந்து புறப்பட்டது. இதனை அரசு ஊழியர் சம்மேளன அறக்கட்டளைத் தலைவர் முருகன் துவக்கி வைத்தார். அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்டோபர், ஆலோசகர்கள் சீத்தாராமன், கீதா, வின்சென்ட்ராஜ் மற்றும் அமைப்பு செயலர்கள் ஆனந்த கணபதி, சிவஞானம், முனுசாமி, ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். இது குறித்த கோரிக்கை மனுவை முக்கிய நிர்வாகிகள் சென்று , முதல்வரிடம் அளித்தனர்.