புதுச்சேரி: புதுச்சேரி அரசின் திருத்திய பட்ஜெட் ரூ.14,100 கோடியாக அதிகரிக்கிறது. அதே வேளையில் ஜி.எஸ்.டி., காரணமாகமாநிலத்திற்கு ரூ.200 கோடி துண்டு விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த மார்ச் 12ம் தேதி நிதி துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.13,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. பட்ஜெட் தாக்கலின்போது மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.7,641.40 கோடியாகவும், மாநில பேரிடர் நிவாரண நிதி, மத்திய அரசின் நிதியுதவி ரூ.3,432.18 கோடி, மத்திய சாலை நிதி ரூ.2 கோடி, மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி, ரூ.400 கோடியாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அந்த ஆண்டின் இறுதிக்குள் வரவு - செலவுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் வராமல் போயிருக்கலாம். அதற்குத் தக்கவாறு செலவுகளைக் குறைக்க வேண்டி இருந்திருக்கலாம். அல்லது சில புதிய செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். இதனை எல்லாம் அடுத்து வரும் சட்டசபை கூட்டங்களில் திருத்திய பட்ஜெட் மதிப்பீடுகளாக ஒப்புதல் பெறுவதற்காகத் தாக்கல் செய்யப்படும். எனவே, திருத்திய பட்ஜெட்டினை தயாரிக்க அனைத்து துறைகளும் முடுக்கிவிடப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. திருத்திய பட்ஜெட்டை ஜனவரி முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. புதுச்சேரி அரசு 13,600 கோடி பட்ஜெட் தாக்கல் செய்திருந்தாலும், குறிப்பாக நலத்திட்டங்களுக்கு ரூ. 500 கோடி வரை அதிகரித்துள்ளது. எனவே ரூ.14,100 கோடி அரசின் திருத்திய பட்ஜெட் இந்தாண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துண்டு விழும்...
புதிய நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கலால் வரியை புதுச்சேரி அரசு உயர்த்தியது. இதனால் ரூ.500 கோடி வரை அரசுக்கு கூடுதலாக வருமானம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்த 5, 12, 18, 28 சதவீதம் இருந்த நான்கு அடுக்கு வரி முறையை எளிமைப்படுத்தி, முக்கியமாக 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என, இரண்டு அடுக்கு விகிதங்களாகக் கடந்த செப்டம்பரில் மத்திய அரசு குறைத்தது. இதனால் 500 கோடி வருமானத்தை எதிர்பார்த்த புதுச்சேரி அரசுக்கு 'ஷாக்' கிடைத்தது. எதிர்பார்த்த 500 கோடி வருமானத்தில் 200 கோடி ரூபாய் வரை துண்டு விழுகிறது. எனவே பிற துறைகளில் வருமானத்தை கணக்கிட்டு திருத்திய பட்ஜெட்டினை ரூ.14,100 கோடிக்கு ரெடி செய்துள்ளது. ஒருவேளை அத்துறையில் எதிர்பார்த்த வருமானம் குறைந்தால் ஒவ்வொரு அரசு துறைகளில் செலவினமும் குறையும் என்பது குறிப்பிடதக்கது.