உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர்-முதல்வர் பட்ஜெட் உரையை புறக்கணிக்க முடிவு: தி.மு.க.,வுடன் சபாநாயகர் அன்பழகன் பேச்சுவார்த்தை 

கவர்னர்-முதல்வர் பட்ஜெட் உரையை புறக்கணிக்க முடிவு: தி.மு.க.,வுடன் சபாநாயகர் அன்பழகன் பேச்சுவார்த்தை 

புதுச்சேரி: பட்ஜெட் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ள தி.மு.க., எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் வரும் 24 ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகின்றது. அன்றைய தினம் மாலையில் நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.14,100 கோடிக்கு பட்ஜெட்டினை தாக்கல் செய்கின்றார். நிரந்தர சபாநாயகர் நியமிக்காத சூழ்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. கவர்னர்- முதல்வர் பட்ஜெட் உரையை புறக்கணிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் அறிவித்து இருந்தார். இதற்கிடையில் கவர்னர்-முதல்வர் உரையை புறக்கணிக்கபோவதாக அறிவித்து இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சபாநாயகர் அன்பழகன் நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி மதியம் 2 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ., க்கள் சபாநாயகரை சந்தித்து பேசினர். அப்போது நிரந்தர சபாநாயகர் கோப்பு கவர்னருக்கு சென்றுள்ளது. பட்ஜெட் உரையில் தி.மு.க., எம்.எல்.ஏக்கள் பங்கேற்று ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என சபாநாயகர் அன்பழகன் வலியுறுத்தினார். பின், எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கூறும்போது, கவர்னர், முதல்வர் உரையை புறக்கணிக்காமல் தி.மு.க., எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார். இது தொடர்பாக எங்களின் கட்சி மேலிடத்திடம் கலந்து பேசிவிட்டு முடிவினை சொல்லுகிறோம் என்று தெரிவித்துள்ளோம் என்றார். அவர் போனதும் தப்பு இவர் போகாததும் தப்பு சபாநாயகர் சந்திப்பிற்கு பின் எதிர்கட்சி தலைவர் நாஜிம் கூறும்போது இரட்டை இன்ஜின் ஆட்சி என கூறி இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தனர். ஆனால், இரட்டை இன்ஜின் நடக்கிறதோ இல்லையோ, ஆனால் இரட்டை நிர்வாகம் நடக்கிறது. இது மாநிலத்திற்கு நல்லதல்ல. நாராயணசாமி முதல்வராக இருந்த காலத்தில், இது போன்ற கூட்டங்களில், கிரண்பேடியும் சென்றார். ஆனால் இன்று இருப்பவர் என்.டி.ஏ., கூட்டணி முதல்வர் அவருக்கும் இதே நிலைதான் என்று சொல்வது ஏற்புடையதல்ல. மொத்தத்தில் அவர் போனதும் தப்பு, இவர் போகாததும் தப்பு என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்