பள்ளி, கல்லுாரிகள் பசுமையாக்கும் திட்டம் இன்று துவக்கம்! 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு
புதுச்சேரி ; புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லுாரி வளாகங்களை பசுமையாக்கும் திட்டம் இன்று துவங்கப்படுகிறது.கடந்த 1988ம் ஆண்டு தேசிய காடுகள் கொள்கை வடிவமைக்கப்பட்டபோது, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், இந்திய வனத்துறை அறிக்கையின்படி புதுச்சேரியின் காடுகளின் பரப்பளவு 50.06 சதுர கி.மீ., மட்டுமே ஆகும். அதாவது மாநிலத்தின் பரப்பளவில் 11 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. தானே புயலின்போது ஏராளமான மரங்களை விழுந்தது.புதுச்சேரி மாநிலத்தில் வன வளங்கள் இல்லாத சூழ்நிலையில், அரசின் அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை வாயிலாக அடுத்த ஐந்தாண்டுகளில் பசுமை பரப்பினை இரட்டிபாக்கும் செயல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இந்த பசுமை புதுச்சேரி இயக்க திட்டம், ஒரு வீடு ஒரு மரம், நகர்புறத் தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, கோவில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை வளாகம், பசுமை தொழில், பசுமை அலுவலகம் என ஏழு சிறப்பு செயல்திட்டங்களுடன் செயல்பட உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் டிசம்பருக்குள் 1 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த ஏழு சிறப்பு திட்டங்களில், பசுமை வளாக திட்டம் இன்று 18ம் தேதி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் வேம்பு, சரக்கொன்றை, மகிழம், மயில்கொன்றை, நெல்லிகாய் என பாரம்பரிய மரக்கன்றுகளுடன் நட்டு துவங்கப்பட உள்ளது.தொடர்ந்து பசுமை வளாகத்தின் கீழ் புதுச்சேரியில் 31 கல்லுாரிகளில் 4,500 மரக்கன்றுகளும், 600 பள்ளிகளில் 6 ஆயிரம் மரக்கன்றுகளும் நட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லுாரிகள் பசுமை நிறைந்த இடமாக மாற உள்ளது. அத்துடன் பல்லுயிரிய வளம் மிக்கவையாக, உயிரினங்களின் வாழ்விடமாவும் செயல்பட உள்ளது. தேர்தல் துறை
புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு குழு உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறுகையில், 'கடந்த லோக்சபா தேர்தலின்போது கார்பன் உமிழ்வு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் துறையானது 'கவுண்ட் தி கார்பன்' என்ற புது முயற்சியை மேற்கொண்டது.இதன் மூலம் தேர்தல் நாள் அன்று, எரி பொருள் நுகர்வு, மின்சார பயன்பாடு, கழிவு உற்பத்தி, போக்குவரத்து உமிழ்வு ஆகியவற்றின் மூலம் 2,70,109 கிலோ என கார்பன்-டை ஆக்சைடு உமிழ்வு கணக்கிடப்பட்டது.எனவே, அதற்கு இணையாக மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்தல் துறையும், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறையும் இணைந்து, பசுமை புதுச்சேரி இயக்கத்தின் கீழ் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி கல்லுாரிகளில் நடப்பட உள்ளது. இதன் மூலம் தேர்தல் நாள் அன்று ஏற்பட்ட கார்பன் உமிழ்வு ஈடு செய்யப்பட உள்ளது.புதுச்சேரியை பசுமையாக்க அனைவருமே மரக் கன்றுகளை நட கைகோர்க்க வேண்டும். என்றார். இந்த திட்டத்தினை தொடர்ந்து கோவில் காடுகள் மீட்டெடுப்பு திட்டமும் விரைவில் செயல்பட உள்ளது குறிப்பிடதக்கது.