| ADDED : மார் 13, 2024 06:54 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சி.டி., ஸ்கேன் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்காக, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மூலமாக ரூ.9.77 கோடிக்கான நிதி ஒதுக்கீடு கடிதம் முதல்வரிடம் வழங்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உலக அளவில் வாணிபம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் புதுச்சேரியை சேர்ந்த பொறியாளரும், பா.ஜ., துணைத் தலைவருமான சிவக்குமார் இயக்குனராக உள்ளார்.இந்நிலையில், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சி.டி., ஸ்கேன் மற்றும் 12 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கான நிதியுதவியை, சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனிடம் இருந்து பெற்று தருவதற்கு அதன் இயக்குனர்களில் ஒருவரான சிவக்குமார் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து, சி.டி., ஸ்கேன் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்காக, 9 கோடியே 77 லட்சத்து, 56 ஆயிரத்து 792 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கடிதத்தை, முதல்வர் ரங்கசாமியிடம், இயக்குனர் சிவக்குமார் நேற்று வழங்கினார். இதில், சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரியின் இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.