அதிகாரிகளின் மெத்தன போக்கு; கிராமங்களில் பேனர் கலாசாரம்
பாகூர் : கிராமப் புறங்களில் அதிகாரிகளின் மெத்தன போக்கால் தடையை மீறி பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது.புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தடையை மீறி பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.இதனால், விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, வழிபாட்டு தலங்களைச் சுற்றிலும், மரண அறிவிப்பு, கண்ணீர் அஞ்சலி, நினைவஞ்சலி பேனர்கள் அணிவகுத்து நிற்கிறது. அதேபோல், திருமணம், பிறந்த நாள் விழா வாழ்த்து பேனர்கள், பல நாட்கள் ஆகியும் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் முறையான முன் அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே பேனர்களை அச்சடித்து தர வேண்டும். அதற்கான அனுமதியை, அச்சடிக்கும் பேனரின் ஓரத்தில் பதிவிட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகள் உள்ளது. ஆனால், இந்த நடைமுறைகள் எதையும், பேனர் அச்சடிப்பவர்கள் பின்பற்றுவது கிடையாது. அதேபோல், தடையை மீறி சட்ட விரோதமாக பேனர் வைப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கொம்யூன் பஞ்சாயத்திற்கு விதி 1973ன் படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.ஆனால், அதிகாரிகள் செய்திக்குறிப்பின் மூலம் எச்சரிக்கை விடுவது வரை மட்டுமே அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அதைத் தாண்டி, நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கே, கிராமப் புறங்களில் பேனர்கள் வைக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டே செல்வதற்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.