புதுச்சேரி : இந்திய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று, சில்லறை வணிகத்தின் சவால்களுக்கான தீர்வுகளை வெளிப்படுத்தி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் முதல் பரிசு பெற்று சாதித்துள்ளனர்.'யோலோ வி8' மற்றும் 'ஓப்பன் வினோ' ஆகிய மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சில்லறை வணிகத்தில் நிகழ்கால உலக சவால்களுக்கான தீர்வுகளை தெரிவிப்பது தொடர்பான போட்டி நடத்தப்பட்டது.பெங்களுருவில், அகில இந்திய அளவில் நடந்த இந்த போட்டியில், நாடு முழுதும் ஐ.ஐ.டி.,க்கள், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இருந்து 3,000 அணிகள் பங்கேற்றன. 8,000 மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையை சேர்ந்த, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முகமது பெரோஸ், பெரோன் ஆரோக்கியம், பிரீத்தா, தளிர்நிலா ஆகியோர் பங்கேற்றனர்.சில்லறை வணிகத்தில் பிரச்னைகளை தீர்ப்பதற்கு, கம்ப்யூட்டர் பயன்பாடு, பொருட்கள் தட்டுப்பாடு குறித்த கணிப்பு, வாடிக்கையாளர்கள் குறித்த பகுப்பாய்வு மற்றும் தரவு காட்சிப்படுத்தல் ஆகிய முக்கிய அம்சங்களுடன் தீர்வுகளை நான்கு மாணவர்களும் வழங்கினர்.இந்த மாணவர்கள் தங்கள் புதுமையான மற்றும் பயனுள்ள சில்லறை விற்பனை தீர்வுக்காக முதல் இடத்தை பிடித்து, 2 லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், முதல்வர் வெங்கடாஜலபதி, துறைத் தலைவர் மதுசூதனன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.