| ADDED : ஜன 03, 2026 04:36 AM
புதுச்சேரி: கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடந்த போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். புதுச்சேரி, போலீஸ் துறையில் 48 பெண்கள் உட்பட மொத்தம் 148 போலீஸ் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பணிக்கு மொத்தம், 10 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆட்சேர்ப்பு குழு ஆய்வில் 135 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 9 ஆயிரத்து 932 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் துவங்கியது. இத்தேர்வு வரும் 10ம் தேதி வரை ஆண்களுக்கும், 11 மற்றும் 12ம் தேதிகளில் பெண்களுக்கு நடக்கிறது. முதல் நாளான நேற்றைய தேர்விற்கு 500 பேர் அழைக்கப்பட்டனர். அவர்கள் காலை 6:00 மணிக்கு முன்பே மைதானம் முன் குவிந்தனர். அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் அசல் அடையள அட்டை சரிபார்த்து மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு மார்பளவு, உயரம், எடை பரிசோதிக்கப்பட்டது. 165 செ.மீ., குறைவாக உயரம் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்வு நடந்தது. அதில், 800 மீட்டர் ஓட்டம் (2 நிமிடம் 50 வினாடி) நீளம் தாண்டுதல் (3.80 மீட்டர்), உயரம் தாண்டுதல் (1.20 மீட்டர்) தேர்வு நடந்தது. இறுதியாக 100 மீட்டர் (15 விநாடி) ஓட்டத் தேர்வு நடந்தது. அதில் தகுதி பெறுபவர்கள், எழுத்து தேர்விற்கு அழைக்கப்படுவர். நேற்று துவங்கிய உடற்தகுதி தேர்வை அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். டி.ஜி.பி., ஷாலினி சிங் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் தேர்வை ஆய்வு செய்தனர்.