உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  6ம் வகுப்பு முதல் நீட் சிறப்பு வகுப்பு: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

 6ம் வகுப்பு முதல் நீட் சிறப்பு வகுப்பு: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: நீட் தேர்வை எதிர்கொள்ள 6ம் வகுப்பு முதல் சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரியவித்தார். அவர், கூறியதாவது: காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடுதல் வசதிகளை மேம்படுத்த வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ், பல்வேறு கல்லுாரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கடந்த முறை பத்தாம் வகுப்பில் 42 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்பில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 6ம் வகுப்பில் இருந்து சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1 முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனி பள்ளிகள் துவங்குவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதற்கான கலந்தாலோசனை கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கிறது. பதவி உயர்வு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கான கோப்பு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான தீர்வு காணப்படும். பேராசிரியர்கள் ஊதியத்திற்காக மட்டும் பணி செய்யக்கூடாது. அந்த மனநிலையை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். 190 ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் பணிகள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் நிரப்பவும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள 292 ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ