| ADDED : ஜன 09, 2024 07:15 AM
புதுச்சேரி : பினாமிகள் பெயரில் அமைச்சர்கள் சொத்துகள் வாங்கி குவிக்கின்றனர் என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:இந்த ஆட்சியில் ஊழல் மலிந்திருக்கிறது. புதுசேரியில் யார் தங்களுடைய தொழிற்சாலையின் உரிமத்தை புதுப்பிக்க சென்றாலும் 1.5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். லைசென்சை மாற்ற 3 லட்சம், மின்சாரத்தின் பவரை உயர்த்த 10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.அந்த துறை அமைச்சருக்கு வில்லியனுாரில் ஒரு புரோக்கர் இருக்கிறார். பணம் அவரிடம் சென்றால் தான் அனுமதி கிடைக்கும். தொழிற்சாலை உரிமம் புதுப்பிப்பது உள்ளிட்ட வேலையை செய்ய புரோக்கரிடம் பணம் கொடுத்தால் தான் அதற்கான வேலை நடக்கும். காவல் துறையில், ஊழல் பகிரங்கமாக நடந்து வருகிறது. பணம் கொடுத்தால் சட்ட ஒழுங்கில் அதிகாரிகள் உடனடியாக மாற்றப்படுவார்கள். அதற்கும் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு எவ்வளவு தொகை என நிர்ணக்கப்படுகிறது.புதுச்சேரி ரவுடிகளின் ராஜ்யமாக மாறி வருகிறது. தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு , ராமநாதனபுரம் பகுதிகளில்உள்ள தொழிற்சாலைகளில் மாமூல் வேட்டை அதிகமாக இருக்கிறது.மக்கள் அச்சமடைவது மட்டு மல்லாம், தொழிற்சாலை நடத்துபவர்கள் அச்சமடையும் நிலை உள்ளது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு தொழிற்சாலை கூட வந்ததில்லை. ஒரு தொழிற்சாலைக்கு ரூ. 15 கோடி வீதம் லஞ்சம் வாங்கி கொண்டு 6 மது தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை மட்டும் 30 சதவீதம் கமிஷன் தொகை, முதல்வர் உட்பட எல்லோருக்கும் பங்கு போகிறது.வணிகவரித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை அதிகாரிகளை மிரட்டி மாதம், மாதம் பணம் பறிக்கின்றனர்.ஒட்டுமொத்தமாக அதிகாரிகளும், அமைச்சர்களும் கூட்டு கொள்ளை அடித்து வருகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பினாமிகள் பெயரில் அமைச்சர்கள், சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். அதற்கான விபரங்கள் என்னிடம் உள்ளது. இந்த ஆட்சி மக்களை சுரண்டும் ஆட்சியாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
மேலும், அவர் கூறுகையில், 'இந்த ஆண்டு, துார்வாராத காரணத்தினால், பாவாணர் நகர் உள்பட நான்கு பகுதிகள் மிதக்கிறது. முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். இந்த பகுதியில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்த அதிகாரியும் வரவில்லை. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது. அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.