காசு, பணம், துட்டு, மணி... மணி... சொத்தை விலை காட்டும் அரசியல்வாதிகள்
அடுத்தாண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு புதுச்சேரி அரசியல் பிரமுகர்கள் தற்போது தயாராகி வருகின்றனர். சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஓட்டு வாங்கினால் எம்.எல்.ஏ., ஆகிடலாம். அதனால் வாக்காளர்களை கவர்ந்திட அரசியல் பிரமுகர்கள் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை அளிப்பது, இல்ல விழாக்களில் பங்கேற்பது, துக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளிப்பது, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது, முதியோர்களுக்கு மருத்துவ உதவி செய்வது என, பணத்தை தண்ணீராக செலவிட்டு வருகின்றனர்.இந்த செலவு, தேர்தல் நெருங்கத்தில் மேலும், பன்மடங்கு அதிகரிக்கும். தற்போது செலவிற்கு பணத்தை தங்கு தடையின்றி ஏற்பாடு செய்துவிட முடிகிறது. ஆனால் தேர்தல் தேதி அறிவித்து, தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டால் பணம் புழக்கத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படும். அப்படியே பணத்தை ஏற்பாடு செய்தாலும், அதனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது பெரும் சவாலாக இருக்கும்.தேர்தல் பறக்கும் படை, செலவின பார்வையாளர் சோதனைகளை கடந்து தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கு தேவையான பணத்தை அரசியல் பிரமுகர்கள் தற்போதே ஏற்பாடு செய்ய துவங்கியுள்ளனர். அதே நேரத்தில், தேர்தலில் செலவிடும் பணத்திற்கான வருவாய் கணக்கு காட்டுவதற்காக பல அரசியல் பிரமுகர்கள் தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த தங்கள் சொத்துக்களை விற்க பேரம் பேசி வருகின்றனர்.