மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் இல்லாததால் தாய் தற்கொலை
நெட்டப்பாக்கம் : மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பணம் கிடைக்காத ஏக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மடுகரை, வி.எஸ்.நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன், 50. இவரது மனைவி மகேஸ்வரி, 46. இவர்களின் மகள் அனுஸ்ரீக்கு வரும் 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பாலமுருகன் மற்றும் மகேஸ்வரி, பல இடங்களில் கடனாக பணம் கேட்டுள்ளனர். எங்கும் கடன் கிடைக்காதால் மனமுடைந்த மகேஸ்வரி கடந்த 23ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை, உறவினர்கள் மீட்டு, மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.