அனைத்து பகுதிகளிலும் தீவிர துப்புரவு பணி களம் இறங்கிய நகராட்சிகள், பொதுப்பணித் துறை
புதுச்சேரி: குப்பை பிரச்னை பூதாகரமாகியுள்ள சூழ்நிலையில், அனைத்து பகுதிகளிலும், நகராட்சிகள், பொதுப்பணித் துறையுடன் இணைந்து தீவிர துப்புர பணியை மேற்கொண்டு வருகின்றன.புதுச்சேரியில் சுவிட்சதா கார்பரேஷன் குப்பை அள்ளும் பணியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் குப்பை அள்ளும் பணிக்கான டெண்டர் காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்தது. தொடர்ந்து கிரீன் வாரியர்ஸ் என்ற நிறுவனத்திற்கு குப்பை அள்ளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும் குப்பை அள்ளும் பணியில் தோய்வு ஏற்பட்டது. ஏற்கனவே இருந்த இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் சாலைகளில் குப்பைகள் குவியல் குவியலாக பரவி கிடந்தது. இதற்கு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த சூழ்நிலையில், தற்போது அனைத்து பகுதிகளிலும் தீவிர துப்புரவு முகாம் முடுக்கிவிட்டுள்ளன. புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித் துறை நேரடியாக களம் இறங்கி குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றன.இது குறித்து உள்ளாட்சி துறை அதிகாரிகள் கூறும்போது, முன்பு வீடு வீடாக தள்ளுவண்டிகளில் சென்று குப்பை சேகரிக்கப்பட்டது. இப்போது அப்படி இல்லாமல் பேட்டரி வாகனங்களில் சென்று குப்பை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு டிரைவர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், குப்பை அள்ளுவதில் தோய்வு ஏற்பட்டது. இப்போது அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்பட்டு வருகின்றது. குப்பைகள் பழைய இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் குப்பைகள் தேங்கியுள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக களம் இறக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள், பொதுப்பணித் துறையும் தீவிர துப்புரவு பணி மேற்கொண்டு வருகின்றன. ஒரிரு தினங்களில் அனைத்து பிரச்னையும் தீர்ந்து விடும் என்றனர்.