| ADDED : மார் 18, 2024 03:17 AM
புதுச்சேரி, : தேசிய அளவிலான போட்டியில், புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் விருது மற்றும் ரொக்கப் பரிசாக 40 ஆயிரம் ரூபாயை வென்று சாதனை படைத்துள்ளனர்.மேகாலயா மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான குழந்தைகள் கல்விசார் போட்டி நடைபெற்றது. சந்திரயான் 3, டிஜிட்டல் இந்தியா, சாலை பாதுகாப்பு, மேக் இன் இந்தியா, துாய்மை இந்தியா, ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்ட 23 தலைப்புகளை கருப்பொருளாக கொண்டு ஆடியோ, வீடியோ உருவாக்கும் போட்டிகள், ஆன் லைன் மூலமாக நடத்தப்பட்டது.மாணவர்கள், ஆசிரியர்கள், தனிநபர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.இதில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கோவில்பத்து அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ஷாலினி, புதுச்சேரி பிள்ளைச்சாவடி நா. வரதன் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் உருவாக்கிய ஆடியோ 'ஆன்லைன் மோசடிகளை கண்டறிதல் மற்றும் தவிர்ப்பது' பிரிவில் வெற்றி பெற்று விருதினை வென்றது.ஷில்லாங்கில் நடைபெற்ற இதற்கான பரிசளிப்பு விழாவில், மேகாலயா மாநில கல்வித்துறை அமைச்சர் ரக்கம் ஏ சங்மா, ஆசிரியர்கள் ஷாலினி, சசிக்குமார் இருவருக்கும் விருது மற்றும் ரொக்கப்பரிசாக 40 ஆயிரம் ரூபாயை வழங்கி பாராட்டினார்.விருது வென்ற ஆசிரியர்களுக்கு, புதுச்சேரி பெண் கல்வி துணை இயக்குனர் சிவராமரெட்டி, காரைக்கால் துணை இயக்குநர் ராஜேஷ்வரி, காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, தலைமையாசிரியர்கள் குமார், திலகவதி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.