பாகூர் அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், கண் மருத்துவம், ஆயுர்வேதா, ேஹாமியோபதி, பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகிறது. பாகூர் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என தினசரி 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த 4 செவிலியர்கள், கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக 4 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மற்ற இருவர் இதுவரை பணியில் சேரவில்லை. பணியில் சேர்ந்த இருவரில், ஒருவர் விடுப்பில் சென்றுவிட்டதால், ஒரு செவிலியர் மட்டுமே தற்போது பணியில் உள்ளார். அதேபோல், இம்மருத்துவமனையில் பணி புரிந்து வந்த மூன்று சுகாதார உதவியாளர்களில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார். மீதி உள்ள இருவரில் ஒருவர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டதால், தற்போது ஒரு சுகாதார உதவியாளர் மட்டுமே பணியில் உள்ளார். இதேபோன்று, இங்கு ஒரு மருந்தாளுனர் மட்டுமே பணியில் உள்ளதால், நோயாளிகள் மருந்து வாங்க வெகு நேரம் கால் கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது, மழைக் காலம் துவங்கி உள்ளதால், மருத்துவனைக்கு, அதிகளவில் பொது மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். எனவே, பாகூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் சுகாதார உதவியாளர் மற்றும் மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்க்கிங் வசதி தேவை
பாகூர் மருததுவமனையில் 'பார்க்கிங்' வசதி இல்லை. இதனால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை கண்டமேனிக்கு நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு வருவோரும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வெளியே செல்வதற்கும் சிரமமாக உள்ளது.
என்னதான் பிரச்னை
கிராமங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி கிடைக்காத சூழல் உள்ளது. இதனால், நகரங்களில் இருந்து கிராமங்களில் பணியாற்ற அரசு ஊழியர்கள் பலர் விரும்புவதில்லை. பாகூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறைக்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.