| ADDED : டிச 10, 2025 05:29 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பூதாகரமாகி உள்ள போலி மருந்து விவகாரத்தால், போலி மருந்தை எப்படி கண்டுபிடிப்பது என, புரியாமல் மக்கள் பெரும் கலக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்றைய விஞ்ஞான உலகில் மனித வாழ்க்கையில், மருந்து என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் இருவரேனும் தினசரி மருந்து உட்கொள்பவர்களாக உள்ளனர். மாதம் தோறும் மளிகை பொருட்கள் வாங்குவது போல் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு கட்டாயமாக மருந்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான போலி சத்து மருந்து கொள்முதல் செய்த விவகாரம் அரசு மருத்துவமனைகளில் மருந்து வாங்கி சாப்பிடுபவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது வெடித்துள்ள போலி மருந்து விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளியாகி உள்ள தகவல்கள் ஒட்டு மொத்த மக்களையும் பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காரணம், இந்த போலி மருந்து விவகாரத்தில் தேடப்படும் ராஜா (எ) வள்ளியப்பன், கடந்த 4 ஆண்டுகளாக போலிமருந்து தயாரித்து வந்துள்ளார். அதுவும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் 36 பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் 1,000 வகையான மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால், தினசரி மருந்து உட்கொள்ளும் நோயாளிகள், இதுநாள் வரை நாம் சாப்பிட்டு வந்த மாத்திரைகள் போலி என்றால் அதனால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா எனவும், மேலும், இனி வாங்கும் மருந்துகளில் எது போலி என்பதை எப்படி கண்டுபிடிப்பது என புரியாமல் பெரும் கலக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவ்விவகாரத்தில் அரசும் மவுனம் காத்து வருவது, மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த போலி மருந்து விவகாரத்தில் கவர்னர் மற்றும் முதல்வரும் உடனடியாக தலையிட்டு, அனைத்து மருந்து கடைகள் மற்றும் மருந்து ஏஜென்சி நிறுவனங்களில் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து, போலி மருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், போலி மருந்துகளை எப்படி அடையாளம் காண வேண்டும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.