உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கந்தலாகி கிடக்கும் சாலைகளால் பொதுமக்கள்... அதிருப்தி; போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுமா?

கந்தலாகி கிடக்கும் சாலைகளால் பொதுமக்கள்... அதிருப்தி; போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கந்தலாகி கிடக்கும் சாலைகளை போர்க்கால அடிப்படையில்சீரமைக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் நாளை 12ம் தேதி முதல் கட்டாய ெஹல்மெட் சட்டத்தை அமல்படுத்த போக்குவரத்து போலீசார், முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். மற்றொரு பக்கமோ, பொதுமக்கள் மோசமான குண்டும் குழியுமாக கந்தலாகி கிடக்கும் சாலைகளால் தினமும் திண்டாடி வருகின்றனர். கட்டாய ெஹல்மெட் சட்டம் அமல்படுத்துவது ஒருபக்கம் இருக்கட்டும்; உயிருக்கு ஆபத்தான குண்டும் குழியுமாக சாலைகளை எப்போது தான் சரி செய்ய போகின்றீர்கள். இந்த சாலைகளால் உயிர் இழப்பு ஏற்படதா என்று சுளீர் கேள்வியை பொதுமக்கள் அனைத்து பகுதிகளிலும் மனக்குமுறலுடன் எழுப்பி வருகின்றனர்.அவர்களின், ஆதங்கத்தில், உண்மை இல்லாமல் இல்லை. கனமழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பிய போதிலும் சாலைகள் அனைத்தும் கந்தலாகி கிடக்கிறது. சாலைகள் அரித்து மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகியுள்ளன. ஜல்லிகள் பல கி.மீ., தொலைவிற்கு பெயர்ந்து கிடக்கின்றன. மற்றொரு பக்கம் சாலையில் புழுதி புயல் பறந்து கண்களை பதம் பார்க்கிறது. இவை வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கின்றன.பெரும்பாலான பள்ளங்கள் மரண பள்ளங்களாக உருவெடுத்துள்ளன. வாகன ஓட்டிகள் சிறிது கவனம் சிதறினாலும் அவ்வளவு தான். உயிரை பறித்து விடும். முக்கிய சாலைகள் தெரு விளக்கு எரியாமல் இருண்டு போய் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இந்த மரண பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இதுவரை பள்ளம் படு குழி நிறைந்த சாலைகள் முழுமையாக சரி செய்யப்படாமல் அனைத்து பகுதிகளிலும் கண்காட்சி போல் விடப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதிய சாலையை போடுவதற்கு தான் பொதுவாக சிரமம் ஏற்படும். சாலை போட டெண்டர் விட்டு, நிதி துறை வரை ஒப்புதல் பெற வேண்டும். ஜவ்வாக இழுக்கும் அரசின் சிவப்பு நாடா நடைமுறைகளால் ரோடு போடவும் காலதாமதம் ஆகும்.ஆனால், ஏற்கனவே போடப்பட்டுள்ள சாலைகளை பராமரிப்பதில் அரசுக்கு எந்த பிரச்னை இருக்க போவதில்லை. ஆனாலும் அந்த ரோடுகளை கூட, பேட்ஜ் ஒர்க் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலைகள் தரமற்ற போடப்பட்டதாக எழுந்த பிரச்னையை தொடர்ந்து அரசு புதிய முடிவு எடுத்தது. புதிதாக போடப்படும் சாலைகள், 'டேமேஜ்', ஆனால் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அந்த சாலைகளை போட்ட ஒப்பந்ததாரர்கள் தான் பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து தான் ரோடு போட அனுமதி கொடுத்தது.அதன்படி தான் இப்போது பெரும்பாலான ரோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்ததாரர்களுக்கு சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித் துறை ஒரு கிடுக்கிபிடி உத்தரவு போட்டால் போதும், பெரும்பாலான சாலைகளுக்கு விமோசனம் கிடைத்து விடும்.அதன் பிறகு அரசு தனது பங்கிற்கு நிதி ஒதுக்கி புதிதாக ரோடுகளை போட்டு சமாளிக்கலாம். எனவே, ஒப்பந்ததாரர்களை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் மோசமாகி உள்ள சாலைகளையும் சீரமைக்க பொதுப்பணித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மோசமான சாலைகள் கொண்ட மாநிலம் என்ற கள பெயரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் புதுச்சேரிக்கு கிடைத்து தலைகுனிவை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை