| ADDED : மார் 10, 2024 04:52 AM
புதுச்சேரியில் காஸ் சிலிண்டர் விலையுடன் கூடுதலாக 40 ரூபாய் வாங்கப்படுவதால், பொது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.அன்றாட தேவையான காஸ் சிலிண்டர் பொது மக்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர். இதனிடையே ஒரு காஸ் சிலிண்டரின் விலை 910 ரூபாய் என, பில்லில் உள்ளது. ஆனால் வீட்டிற்கு காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர், கூடுதலாக 40 ரூபாய் சேர்த்து, மொத்தம் 950 ரூபாய் வாங்குவதாக கூறி, பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.மக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தாலும், வீட்டுக்கு காஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் கூடுதலாக 40 ரூபாய் வசூலிக்கின்றனர். இதுபற்றி, காஸ் டெலிவரி செய்யும் ஊழியரிடம் மக்கள் கேட்கும் போது, எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. காஸ் சிலிண்டர் எடுத்து வரும் வாகன வாடகைக்கு சேர்ந்து தான் கூடுதலாக 40 ரூபாய் வாங்கப்படுகிறது என, தெரிவிக்கின்றனர். எனவே, காஸ் சிலிண்டருடன் கூடுதல் பணம் வாங்கும் டெலிவரி ஊழியர்கள் மீது காஸ் ஏஜென்சி நிர்வனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.