புதுச்சேரி:பேனர்கள் வைக்கும் விஷயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத புதுச்சேரி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவதிப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் பதிவாளருக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி புகார் கடிதம்அனுப்பியுள்ளார்.புதுச்சேரியின் சாலைகள், சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில், பேனர்கள் கண்டமேனிக்கு வைக்கப்படுகின்றன.இதனால் வாகனங்களில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்படுகிறது.பேனர்களால் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.அப்படி இருந்தும் பேனர்கள் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.கோர்ட் தலையிட்ட பிறகு தான் ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நகரெங்கும் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைத்தனர். இது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.இது தொடர்பாக, புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில் அவர்சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுகளை கடைபிடிக்காத புதுச்சேரி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவதிப்பு உள்ளிட்ட உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தலைமை நீதிபதி சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில்புதுச்சேரியில் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், அலங்கார வளைவுகள், கட்அவுட்டுகள் வைக்கக்கூடாது என, ஐகோர்ட் உத்தரவு மீறப்பட்டுள்ளது.ஏற்கெனவே புதுச்சேரி அரசுக்கு இதுதொடர்பாக அனுப்பப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ளது.ஐகோர்ட் கடந்த 1.10.21 மற்றும் 28.4.2022 ஆகிய தேதிகளில் இதுதொடர்பான உத்தரவுகளை அனுப்பியது. இதை மாவட்ட நிர்வாகம் மீறியுள்ளது. புதுச்சேரி முதல்வருக்கு கடந்த 4ம் தேதி பிறந்தநாளையொட்டி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அவரது ஆதரவாளர்கள், தொழிலதிபர்கள் நகரம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார வளைவுகள் போன்றவற்றை வைத்திருந்தனர்.புதுச்சேரி முழுக்க கட்அவுட்டுகள் வைக்கப்பட்டு நகரின் சூழல் குறைக்கப்பட்டது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் சட்ட விரோத பேனர்கள், கட் அவுட்டுகள் அமைப்பதை புகாராக தெரிவிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ்-ஆப் எண் 9443383418 நிர்வாக காரணங்களைக் காட்டி மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.இதனால், சட்ட விரோதமாக பதாகைகள், கட்அவுட்டுகள் பேனர்கள் ஆகியவற்றை அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் ஆதரவாளர்களும் அமைத்துள்ளனர்.இதுதொடர்பான செய்திகள் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன.சென்னை ஐகோர்ட் வழிகாட்டுகளை கடைபிடிக்காத அதிகாரிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை தேவை.சாலை விபத்துகளை தவிர்க்கவும், பாதசாரிகளின் விலைமதிப்பற்ற உயிருக்கு பேனர்களால் அச்சுறுத்தலை தவிர்க்கவும், பொதுமக்களின் நலனை பாதுகாக்கவும், சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு நடவடிக்கை உடன் துவங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அன்றே சொன்னது 'தினமலர்'
சட்ட விரோத
பேனர்கள் தொடர்பாக ஐகோர்ட் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது.
இதுதொடர்பாக புதுச்சேரி நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு அரசு அதிகாரிகளுக்கு
குட்டு வைத்தது. ஆனாலும், சகட்டுமேனிக்கு பேனர்கள் வைப்பது தொடர்ந்தது.
அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக
கடந்த மாதமே 'தினமலர்' நாளிதழ் எச்சரித்து இருந்தது. பேனர்களை
அகற்றாவிட்டால் கோர்ட் படி ஏற வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்து
இருந்தது. ஆனாலும் பேனர்களை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்
தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்படும் பட்சத்தில் தலைமை செயலர், கலெக்டர், டி.ஜி.பி., பொதுப்பணித்
துறை தலைமை பொறியாளர், போக்குவரத்து எஸ்.பி., புதுச்சேரியில் உள்ள
நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் அதிகாரிகள் என 10
துறைகளின் அதிகாரிகள் கோர்ட் படி ஏற வேண்டி இருக்கும்.