| ADDED : ஆக 26, 2011 12:26 AM
புதுச்சேரி : மாணவர் சிறப்பு பஸ்களை, மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவிகளுக்குத் தனியாகவும் இயக்க வேண்டும் என, அங்காளன் எம்.எல்.ஏ., கூறினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அவர் பேசியதாவது: கிராமப்புற மக்களின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்புக்கான மான்யம் உயர்த்தப்பட்டுள்ளது. பசுமை நிதியம் துவக்கப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். பள்ளி மாணவர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அதே வேளையில், மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவிகளுக்குத் தனியாகவும் பஸ்களை இயக்க வேண்டும். அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் போது, ஆசிரியர் பணியிடங்களையும் அங்கு உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் சிறப்பான மருத்துவ வசதி அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் மாநில மக்களுக்கு சிறந்த பலன் தரும். இவ்வாறு அங்காளன் பேசினார்.