புதுச்சேரி ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்., சிங், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். சுற்றுலா பயணிகள் குவியும் புதுச்சேரி ரயில் நிலையத்தை ரூ.93 கோடி செலவில் மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி கடந்த 2023ம் ஆண்டு காணொலி வாயிலாக துவங்கி வைத்தார். மேம்பாட்டு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி, பழைய கட்டடங்கள் சீரமைப்பு, பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், பைலட் ஓய்வறைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றனர். மேலும், பயணிகள் காத்திருப்பு கூடம், நடைமேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர், உணவகம், வணிக வளாகம், மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 50 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது பணிகளை விரைவாக முடித்து, பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமேலாளர் உத்தரவிட்டார். ஆய்வின்போது திருச்சி கோட்ட மேலாளர் பாலக் ராம், முதல்நிலை கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) நந்தலால் உடனிருந்தனர். முன்னதாக ஹிந்தி அலுவல் மொழி சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடல் நடந்தது.