இலவச பஸ் பாஸ் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் ரூ.4 லட்சம் நகை பறிப்பு
புதுச்சேரி: இலவச பஸ் பாஸ் வாங்கி தருவதாக கூறி, மூதாட்டியிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரிக்கலாம்பாக்கம், மாணிக்கவாசகம் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி சந்திரா, 65. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 13ம் தேதி சிகிச்சைக்காக ஜிப்மர் வந்த சந்திரா மீண்டும் வீட்டிற்கு செல்ல, புதிய பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, 50 வயது மதிக்கத்தக்க நபர், அவரிடம் வந்து பேச்சு கொடுத்தார். அதில், பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வாங்கி தருவதாக அவரிடம் கூறினார். மேலும், அதற்கு போட்டோ எடுக்க பஸ் நிலையத்தில் இருந்து சந்திராவை வெளியே அழைத்து சென்றார். அங்குள்ள துணிக்கடை அருகே அழைத்து சென்ற அந்த நபர், சந்திராவிடம் போட்டோ எடுக்க கழுத்தில் உள்ள நகை மற்றும் மோதிரத்தை கழட்டி தரும்படி கூறினார். அதை நம்பி, சந்திரா கழுத்தில் இருந்த 4 சவரன் செயின், அரை சவரன் மோதிரம் உள்ளிட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை கழட்டி அந்த நபரிடம் கொடுத் தார். பின், சந்திராவை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு, போட்டோ எடுக்க ஆட்களை அழைத்து வருவதாக கூறிவிட்டு, அங்கிருந்து மர்ம நபர் சென்றுள்ளார். அவர் மீண்டும் திரும்ப வரவில்லை. அதன்பிறகே மர்மநபரிடம் நகைகளை பறிகொடுத்து தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 4 லட்சம் மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.