ரூ.60 கோடி மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரியில் 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம் நடத்தி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கை, சைபர் கிரைம் பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி, சாரம், காமராஜர் சாலையில் 'கோ பிரி சைக்கிள்' நிறுவனம், சுற்றுலா சைக்கிள் திட்டத்தில் முதலீடு பெற்று, மோசடி செய்து வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடந்த ஏப் .3ம் தேதி சைபர் கிரைம் போலீசார், அதிரடியாக 'கோ பிரி சைக்கிள்' நிறுவனத்தில் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2.45 கோடி மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அமலாக்க துறையினர் நடத்திய சோதனையில், புதுச்சேரியில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் மோசடி செய்ததும், 13 வங்கி கணக்குகளில் ரூ. 20 கோடி வைத்திருப்பதை கண்டுபிடித்து, அந்த வங்கி கணக்குகளை முடக்கினர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கோ பிரி சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த நிஷாந்த் அகமது உள்ளிட்டோரை தேடி வந்தனர். தொடர் விசாரணையில், இவ்வழக்கில் இணைய வழி குற்றங்கள் ஏதும் இல்லாததால், இவ்வழக்கை வேறு பிரிவுக்கு மாற்றிடுமாறு சைபர் கிரைம் போலீசார் கடந்த 2 மாதத்திற்கு முன் டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில், நிஷாந்த் அகமது, வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அமலாக்க துறை 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வழங்கியது. மேலம், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை அமலாக்க துறையினர் நான்கு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து 5ம் முறையாக அனுப்பிய சம்மனை ஏற்ற நிஷாந்த் அகமது கடந்த 8 ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், நடத்திய விசாரணையில் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அனுமதி ஏதும் இன்றி, பொதுமக்களிடம் பெருந்தொகையை வசூலித்தது, மேலும், வசூல் தொ கை குறித்து கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்காதது ஆகிய குற்றங்களின் பேரில், நிஷாந்த் அகமதுவை கைது செய்து நேற்று முன்தினம் சென்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சி றையில் அடைத்தனர். இந்நிலையில், கோ பிரி சைக்கிள் நிறுவனம் வழக்கில், இணைய வழி குற்றங்கள் இல்லாததாலும், பெரும் தொகை மோசடி நடந்திருப்பதால், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார். அதன்பேரில், இவ்வழக்கை சைபர் கிரைம் போலீசார் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, அமலாக்க துறையினரால் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த அகமதுவை கோர்ட் அனுமதி பெற்று, புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.