பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு மீண்டும் வேலை; முதல்வருக்கு சம்பத் எம்.எல்.ஏ., கோரிக்கை
புதுச்சேரி; சட்டசபை பூஜ்ய நேரத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது:பணி நீக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கியது உட்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.அதேபோல் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் மாற்று பணி வழங்க வேண்டும். பாப்ஸ்கோ ஊழியர்கள் பல ஆண்டுகளாக வேலையில்லாமல், வருமானமின்றி சிரமப்படுகிறார்கள். மொத்தம் 811 ஊழியர்கள் பாப்ஸ்கோவில் பணியாற்றி வந்தனர். அதில் தினக்கூலி, நிரந்தர மற்றும் வவுச்சர் ஊழியர்கள் என பல பிரிவுகளில் பணியாற்றி வந்தனர்.இவர்களில் பட்டம் படித்த 50 வயதிற்கு கீழ் அதிக ஊழியர்கள் உள்ளனர். நிரந்தர பணியாளர்களை அரசின் பிற துறைக்கு மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு கிடைக்கும்.அதன் மூலம் அரசின் துறைகளில் வேலை துரிதமாக நடைபெறும்; அவர்களுக்கும் வேலை கிடைக்கும். அதேபோல் தின கூலி ஊழியர்களையும் பிற துறைக்களுக்கு மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக போராடிவரும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.