புதுச்சேரி, : தென் மண்டல அளவிலான கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் லீக் யோகா போட்டியில் ஒட்டுமொத்த பிரிவில் புதுச்சேரி அணி இரண்டாம் இடம் பிடித்தது. தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு யோகாசன சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் யோகாசன பாரத் சார்பில் திண்டுக்கல் பொறியியல் கல்லுாரியில், தென் மண்டலம் அளவிலான அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டி நடந்தது. புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநில அணிகள் பங்கேற்றன. புதுச்சேரி சித்தர்பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி, செயலாளர் தயாநிதி வழிகாட்டுதல்படி, புதுச்சேரியைச் சேர்ந்த 18 மாணவிகள் கொண்ட அணி பங்கேற்றது. போட்டிக்கு தேவசேனா பவனானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியை நடத்தும் தொழில்நுட்ப அலுவலர்களாக டாக்டர் பாலாஜி, ஸ்வரூப் ரமணன், சுரேந்திரன், சண்முககுமார் உட்பட 18 பேர் பங்கேற்றனர். 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலை ஜோடி போட்டியில், ரேவதி ஸ்ரீ மற்றும் விஷ்ணு மகாலட்சுமி தங்க பதக்கம் வென்றனர்.கலை குழுவில் அஞ்சலி ராய், சுகன்யா, ஜெகதீஸ்வரி, ரேவதிஸ்ரீ, விஷ்ணு மகாலட்சுமி வெள்ளி பதக்கம் வென்றனர். பாரம்பரிய யோகா போட்டியில் அஞ்சலி ராய் வெண்கலம் வென்றார். 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பாரம்பரிய போட்டியில், லீனாஸ்ரீ வெண்கல பதக்கமும், கலை ஒற்றையர் பிரிவில் கோஜனா வெண்கலம் பதக்கம் வென்றார். கலை குழு போட்டியில் சஸ்மிதா, லீனாஸ்ரீ, ஜனனி அக் ஷயா, கோஜனா வெண்கலம் பதக்கம் வென்றனர். போட்டியில் பதக்கம் வென்ற அனைவரும் பிப்., மாதம் உத்தரபிரதேசம் நொய்டாவில் நடக்கும் தேசிய அளவிலான அஸ்மிதா கேலோ இந்திய பெண்கள் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக அஸ்மிதா கேலோ இந்தியா மகளிர் லீக் போட்டியில், புதுச்சேரி அணி 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.