உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை

ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை

வில்லியனுார் : வில்லியனுாரில் ஓட ஓட விரட்டி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிக்கிறது.புதுச்சேரி, வில்லியனுார் அருகே உறுவையாறு பேட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தனபால்,22; இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வில்லியனுாரில், கண்ணகி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், தனபாலை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.தகவலறிந்து வந்த வில்லியனுார் போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தனபாலை மீட்டு, வில்லியனுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.சம்பவ இடத்தில் எஸ்.பி., வீரவல்லவன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கணேஷ், சப் இன்ஸ்பெக்டர்கள் வேலு, சண்முக சத்தியா, குமார் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட தனபால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறுவையாறு பேட் பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக, தனபால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.கொலையான தனபால் மீது 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.இச்சம்பவத்தை தொடர்ந்து, உறுவையாறு பேட் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ