| ADDED : பிப் 13, 2024 05:11 AM
புதுச்சேரி: அஞ்சல் துறையில், பிரதமரின் காப்பீடு திட்டம் மற்றும் உதவித் தொகை பெற போஸ்ட் பேமெண்ட் பேங்கில் கணக்கு துவங்க, சிறப்பு முகாம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் இணைந்து பிரதமரின், மாத்ரூ வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம், உதவி தொகை பெற வங்கி கணக்கு துவங்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம், நாளை (14ம் தேதி) ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ள கம்பன் நகரில், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.முகாமில், அஞ்சலகத்தில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கில் கணக்கு துவங்கி , விபத்து காப்பீடு திட்டம் பெறுவதற்கும், கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் பெண்கள் அரசின் உதவித் தொகையை தங்கள் பகுதி போஸ்ட் மேன் மூலம் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளலாம். மற்ற உதவித் தொகை பெறுவதற்கான வசதியும் உள்ளது.இந்த வங்கி கணக்கு மூலம், ஆன்லைன் பரிவர்த்தனைகள் இலவசமாக பெற்று கொள்ளலாம். மேலும், மொபைல் போன் ரீசார்ஜ், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம். புதிய வங்கி கணக்கு துவங்க ரூ. 200 செலுத்தி, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான விபத்து காப்பீடு திட்டத்தை பதிவு செய்து கொள்ளலாம்.முகாமில், 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச ஆதார் பதிவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பதிவு செய்யப்படுகிறது.