மாஜி முதல்வர் நாராயணசாமி போராட்டம் புறக்கணித்த காங்., முக்கிய நிர்வாகிகள்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமியை, காங்., முக்கிய நிர்வாகிகள் கண்டுக்காமல் விட்டது ஏன் என, புரியாமல் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். நெல்லித்தோப்பு தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறையை கண்டித்து கடந்த புதன்கிழமை கவர்னர் மாளிகை முன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். திடீரென நடந்த இந்த போராட்டம் காங்., கட்சியை சேர்ந்த பலருக்கு உடனே தெரியவில்லை. போராட்டத்தில் நாராயணசாமியுடன் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் மகளிர் அணி தலைவி நிஷா, இளையராஜா, முன்னாள் கவுன்சிலர் குமரன் உள்பட 25 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதன் பின், அங்கு வர முயன்ற நாராயணசாமியின் ஆதரவாளர்களை போலீசார் பேரிக்கார்டு வைத்து தடுத்தனர். குடிநீர் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருப்பேன் என, நாராயணசாமி கூட்டத்தில் கோபமாக கூறினார். இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நாராயணசாமியை சமாதானம் செய்து, கவர்னரை சந்திக்க வைத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அன்று உள்ளூரில் இல்லாததால் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில், போராட்டத்தின்போது, கூப்பிடும் துாரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒருவர் கூட அந்த பக்கமே தலை காட்டவில்லை. என்ன காரணம் என, யாருக்கும் புலப்படவில்லை. கட்சியில் உள்ள சிலர் கூறுகையில், 'ஏற்கனவே, நாராயணசாமி முதல்வராக இருக்கும்போது கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து கவர்னர் மாளிகை முன் பல நாட்கள் நடத்திய போராட்டத்தால் எந்த பலனும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் போதே பயப்படாத அதிகாரிகள் இப்பொழுது எந்த பதவிகளிலும் இல்லாத நம் போராட்டத்தை கண்டு கொள்ளப் போகிறார்களா? அதனால் தான் முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை' என்றனர். புதுச்சேரி முழுதும் முக்கிய பிரச்னையாக வெடித்துள்ள குடிநீர் பிரச்னையை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி நடத்திய போராட்டத்தை கட்சியினர் சிலர் புறக்கணித்தாலும் பொதுமக்களிடையே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.