புதுச்சேரி : கண்டமங்கலம் ரயில்வே பாலம் பணி போக்குவரத்து மாற்றத்தால், பஸ் பயணிக்கும் துாரத்தை பொறுத்து கட்டணம் ஏற்றம் இருக்கும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.கண்டமங்கலம் ரயில் பாதையில் மேல் பாலம் பணி நடந்து வருகிறது.ரயில்வே துறையின் ஒப்புதலின்படி கண்டமங்கலத்தில் மேம்பாலம் (பவுஸ்டிரீங் கிரிடர்) கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இதனால் புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் மற்றும் வில்லியனுாரில் இருந்து புதுச்சேரிக்கு போக்குவரத்தை மாற்றி அமைத்து, அனைத்து நிலை பஸ்கள் (உள்ளூர், வெளியூர்) இயக்கப்படு கிறது.கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் முடியும் வரை போக்குரவத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடு உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் களுக்கும், பள்ளி பஸ்களுக்கும் பொருத்தும்.விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் மதகடிப்பட்டு,வாதானுார், பத்துக்கண்ணு, வில்லியனுார், புதுச்சேரி வழியாக திருப்பி விடப்படும். புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வெளியூர் வாகனங்கள் அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, திருபுவனை, விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும்.இந்த மாற்றுவழி ஏற்பாட்டால் பஸ்கள் அதிக துாரமோ அல்லது குறைந்த துாரமோ பயணிக்க வேண்டி இருக்கும். கடந்த 21.06.2018 தேதியின் அரசாணைப்படி கட்டண விகிதங்கள் விகிதாச்சார அடிப்படையில் பஸ் கட்டணம் அதிகரிப்பு மற்றும் குறைப்பு இருக்கும்.இந்த ஏற்பாடு மதகடிப்பட்டு மற்றும் அரியூர் வழியாக மேற்கொண்ட போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்து , மேம்பாலம் முடியும் வரை அமலில் இருக்கும். பொதுமக்கள், சாலை பயனாளிகள் மேற்கூறிய போக்குவரத்தை மாற்றத்திற்கு ஒத்துழைக்கமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம் உயரும்
புதுச்சேரி அரசு வெளியிட்ட அரசாணைப்படி, ஏ.சி. அல்லாத சாதாரண லோக்கல் பஸ்கள்ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா வீதம், 10 கி.மீ.,துாரத்திற்குள் ரூ.7 கட்டணம் வசூலித்து கொள்ளலாம்.அதன்படி, கணக்கிட்டால் புதுச்சேரியில் இருந்து அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, திருபுவனை, மதகடிப்பட்டு வரை 32 கி.மீ., துாரம் உள்ளது. அரசு ஆணைப்படி கணக்கிட்டால் புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு செல்ல ரூ. 19 கட்டணம் வசூலிக்கலாம்.அதுபோல் மதகடிப்பட்டு, வாதானுார், பத்துக்கண்ணு, வில்லியனுார், புதுச்சேரி துாரமும் 32 கி.மீ., எனவே, மதகடிப்பட்டில் இருந்து புதுச்சேரி வரவும் ரூ. 19 கட்டணம் வசூலிக்கலாம்.