| ADDED : ஜன 03, 2024 12:18 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வாலிபரை அடித்து கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரி, நோணாங்குப்பம், பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 16. தனது 16 வயது தோழியுடன், கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினார். பின்னால் பைக்கில் வந்த அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு நிர்மல் (எ) நிர்மல்குமார், 24; விக்கி (எ) விக்னேஷ், 24; இருவரும் ராஜேஷின் தோழிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.ராஜேஷ் தனது நண்பரான நோணாங்குப்பம் பாடசாலை வீதியைச் சேர்ந்த ஏ.சி., மெக்கானிக் விக்கி (எ) விக்னேஷ்வரனை வரவழைத்தார். நிர்மல்குமார் தனது நண்பர்களை வரவழைத்தார். இரு தரப்பும் மோதிக் கொண்டது.லேசான காயத்துடன் சாலையோர கட்டையில் அமர்ந்து மொபைல்போன் பார்த்த ஏ.சி.மெக்கானிக் விக்கி (எ) விக்னேஷ்வரனை, நிர்மல்குமார் கழுத்தில் பலமாக குத்தினார். இதில் விக்கி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, காக்காயன்தோப்பு நிர்மல்குமார் மற்றும் விக்னேஷ் இருவரை நேற்று கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.