உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் அ.தி.மு.க., மீண்டும்  துளிர்க்குமா?: ஏக்கத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்

புதுச்சேரியில் அ.தி.மு.க., மீண்டும்  துளிர்க்குமா?: ஏக்கத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு காலத்தில் ஆட்சி கட்டிலில் அமர்ந்து அனைத்து கட்சிகளையும் தெறிக்க விட்ட அ.தி.மு.க.,வில் பலர் ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளதால், வரும் தேர்தலில் கரையேறுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசியலில் கடந்த 1974ம் ஆண்டு முதல் 2016 வரை அசைக்க முடியாத மற்றும் பிரதான கட்சியாக அ.தி.மு.க., விளங்கியது. 1974ல் கம்யூ., கூட்டணியில் 12 இடங்களில் வெற்றி பெற்று ராமசாமி முதல்வர் பதவி வகித்தார். தொடர்ந்து 1977ல் ஜனதா கட்சி கூட்டணியில் அ.தி.மு.க., 12 இடங்களை பிடித்து ராமசாமி முதல்வராக பதவி வகித்தார். கடந்த 2001ல் காங்., கூட்டணி அமைச்சரவையில், சபாநாயகர், அமைச்சர் பதவிகளில் அதிகாரம் செலுத்தியது. அதன் பின், படிப்படியாக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை குறைந்து, கடந்த 2021 தேர்தலில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க., ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. இதற்கு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என அரதப்பழசான காரணத்தை அ.தி.மு.க.,வினர் கூறினாலும், இவர்களுடன் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 5 இடங்களை கைப்பற்றி அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறது. இந்நிலையில் 1980க்கு பிறகு, 2021ல் புதுச்சேரியில் அ.தி.மு.க.,விற்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாமல் 'வாஷ் அவுட்' நிலையில் உள்ளது. அ.தி.மு.க.,வின் இந்த பரிதாப நிலைக்கான காரணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி புதுச்சேரி நிர்வாகிகளிடம் எழுப்பாததால், இனியும் கட்சியில் இருந்தால் தேரமாட்டோம் என்ற நிலைக்கு வந்த பலர் மாற்றுக் கட்சிகளுக்கு ஓட்டம் பிடிக்க துவங்கியுள்ளனர். ஏற்கனவே கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான ஓம்சக்தி சேகர் ஓ.பி.எஸ்., அணியிலும், காரைக்கால் அசனா த.வெ.க., விலும், முதலியார்பேட்டை பாஸ்கர் (மாநில செயலாளரின் தம்பி) பா.ஜ.,விலும் இணைந்துவிட்டனர். முத்தியால்பேட்டை வையாபுரி மணிகண்டன் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுடன் நெருக்கம் காட்டி வருவதால், அவர் அ.தி.மு.க.,வில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை போன்றே கட்சியின் பல முன்னணி நிர்வாகிகள் பிற கட்சி முக்கியஸ்தர்களுடன் நெருக்கம் காட்டி வருவது 'ரத்தத்தின் ரத்தங்களுக்கு' கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் 12 எம்.எல்.ஏ.,க்களுடன் வெற்றி பெற்று முதல்வர், சபாநாயகர், அமைச்சர் என பல பதவிகளில் அமர்ந்து, வலம் வந்த கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த மிக மோசமான தோல்வியால், வரும் தேர்தலில் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் 2 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்ற தகவல் பரவியதால், தேர்தலில் போட்டியிடலாம் என, காத்திருந்தவர்கள் வேறு கட்சிக்கு ஓடுவதற்கு காரணமாகிவிட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின், கட்சி தலைமை மீது சிறிதும் பயமின்றி, தாறுமாறான கோஷ்டி மோதல், உள்ளடி வேலைகள், எதிர்க்கட்சியினருடன் ரகசிய உறவு, கட்சி வளர்ப்பில் ஆர்வம் இல்லாத நிலை என, தாறுமாறாக புதுச்சேரி அ.தி.மு.க.,வினர் செயல்பட்டதன் விளைவு வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி கரையேறுமா என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது. ..... தேய்ந்து கட்டெறும்பான கதை புதுச்சேரி அ.தி.மு.க.,விற்கு பொருந்தி விட்டது. இதனை உடனடியாக சரி செய்ய பழனிசாமி சாட்டையை சுழற்றினால் மட்டுமே முடியும். பழனிசாமி என்ன செய்யப் போகிறார் என காத்திருக்கின்றனர் அ.தி.மு.க., தொண்டர்கள்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை