உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: 58 ரன்னுக்கு சுருண்டது உகாண்டா

ஆப்கானிஸ்தான் அணி அசத்தல் வெற்றி: 58 ரன்னுக்கு சுருண்டது உகாண்டா

புரோவிடன்ஸ்: ஆப்கானிஸ்தான் அணி 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சி' பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், உகாண்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற உகாண்டா அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

நல்ல துவக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அபாரமாக ஆடிய குர்பாஸ், 28 பந்தில் அரைசதம் எட்டினார். தினேஷ் நக்ரானி வீசிய 6வது ஓவரில் வரிசையாக 4 பவுண்டரி விரட்டிய இப்ராஹிம், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 154 ரன் சேர்த்த போது இப்ராஹிம் (70) அவுட்டானார். குர்பாஸ் (76) நம்பிக்கை தந்தார். நஜிபுல்லா ஜத்ரன் (2), குல்பதின் (4), அஸ்மதுல்லா ஒமர்ஜாய் (5) சோபிக்கவில்லை.ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது.

பரூக்கி அசத்தல்

சவாலான இலக்கை விரட்டிய உகாண்டா அணிக்கு பரூக்கி தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ரோனக் படேல் (4), ரோஜர் முகாசா (0), ரியாசத் அலி ஷா (11) வெளியேறினர். நவீன் உல் ஹக் பந்தில் தினேஷ் நக்ரானி (6), அப்பேஷ் ராம்ஜானி (0) அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய பரூக்கி பந்தில் ராபின்சன் ஒபுயா (14), கேப்டன் பிரையன் மசாபா (0) அவுட்டாகினர். ரஷித் கான் 'சுழலில்' பிலால் ஹசன் (8), ஹென்றி செனியோன்டா (0) சிக்கினர்.உகாண்டா அணி 16 ஓவரில் 58 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 5, நவீன், ரஷித் கான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

குறைந்தபட்ச ஸ்கோர்

'டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த 4வது அணியானது உகாண்டா (58/10). முதலிடத்தில் நெதர்லாந்து (39/10, எதிர்: இலங்கை, 2014, இடம்: சாட்டோகிராம்) உள்ளது.

இமாலய வெற்றி

'டி-20' உலக கோப்பையில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 4வது அணியானது ஆப்கானிஸ்தான் (125 ரன்). முதலிடத்தில் இலங்கை (170 ரன், எதிர்: கென்யா, 2007, இடம்: ஜோகனஸ்பர்க்) உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை