கான்பெரா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. ஒருநாள் தொடரை 3-0 என வென்றது. ஆஸ்திரேலியா சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி நேற்று கான்பெராவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பீல்டிங் தேர்வு செய்தார்.
பார்ட்லெட் அபாரம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதானஸ் (32), கிஜோர்ன் (8) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. கேப்டன் ஷாய் ஹோப் 4 ரன் எடுத்தார். ராஸ்டன் சேஸ் (12), சேவியர் பார்ட்லெட் வேகத்தில் வீழ்ந்தார். வேறு யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவரில் 86 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவின் பார்ட்லெட் அதிகபட்சமாக 4 விக்கெட் சாய்த்தார்.
எளிய வெற்றி
பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிராசர் (41), இங்லிஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஹார்டி (2) ஏமாற்றினார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 6.5 ஓவரில் 87/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில், இத்தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. இங்லிஸ் (35), ஸ்மித் (6) அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது.
1
ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் பார்ட்லெட், 2 போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆனார். தனது முதல் இரு போட்டியில் 4 அல்லது 4க்கும் மேல் என விக்கெட் சாய்த்த முதல் ஆஸ்திரேலிய பவுலர் ஆனார். சர்வதேச அரங்கில் அம்புரோஸ் (வெ.இண்டீஸ்), ஆடம் ஹோலியாக் (ஆஸி.,) விட்டோரி (ஜிம்பாப்வே), முஸ்தபிஜுர் ரஹ்மான் (வங்கதேசம்), ஹம்சா தாகிருக்கு (ஸ்காட்லாந்து) அடுத்து இந்த சாதனை படைத்த ஆறாவது பவுலர் ஆனார் பார்ட்லெட்.
22
சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக தொடர்ந்து 22 போட்டிகளில் தோற்காமல் வலம் வருகிறது ஆஸ்திரேலியா. கடைசியாக 1997, பெர்த் போட்டியில் தோற்றது. பின் பங்கேற்ற 22 போட்டியில் 20ல் வென்றது. 2 போட்டிக்கு முடிவில்லை.
259
ஒருநாள் அரங்கில் அதிக பந்து (259) மீதம் உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தோற்ற போட்டி வரிசையில் இது முதலிடம் பிடித்தது. முன்னதாக 244 பந்து மீதமுள்ள நிலையில் தோற்றிருந்தது (எதிர்-ஆஸி., 2013, பெர்த்).
1000
ஆஸ்திரேலிய அணி நேற்று தனது 1000 வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. இதில் 609 வெற்றி, 348 தோல்வி அடைந்தது. 9 போட்டி 'டை' ஆக, 34 போட்டிக்கு முடிவில்லை. இந்தியாவுக்கு (1055 போட்டி, 559 வெற்றி, 443 தோல்வி, 9 'டை', 44 முடிவில்லை) அடுத்து இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது அணியானது.