| ADDED : பிப் 04, 2024 08:07 PM
சிட்னி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. சிட்னியில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஆஸ்திரேலிய அணிக்கு பிரேசர்-மெக்குர்க் (10), ஜோஷ் இங்லிஸ் (9), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (5) ஏமாற்றினர். மாத்யூ ஷார்ட் (41), லபுசேன் (26), ஆரோன் ஹார்டீ (26) ஓரளவு கைகொடுத்தனர். சீன் அபாட் (69) அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்தது.பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 175 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கீசி கார்டி (40), கேப்டன் ஷாய் ஹோப் (29), ராஸ்டன் சேஸ் (25) ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட், சீன் அபாட் தலா 3 விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை சீன் அபாட் வென்றார். ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றியது.