ருதுராஜ், சர்பராஸ் சதம்
சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, மகாராஷ்டிரா, தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன், தமிழக கிரிக்கெட் சங்க லெவன் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று மூன்றாவது சுற்று போட்டி துவங்கின. திருவள்ளூரில் நடக்கும் 'பி' பிரிவு போட்டியில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன், பெங்கால் அணிகள் மோதுகின்றன.'டாஸ்' வென்று பேட்டிங் செய்த தமிழக அணிக்கு துவக்கத்தில் சச்சின் (57) அரைசதம் அடிக்க, துஷார் ரஹேஜா (39), சோனு யாதவ் (48) மட்டும் கைகொடுத்தனர். கேப்டன் ஷாருக்கான் (8) உட்பட மற்றவர்கள் ஏமாற்ற, தமிழக அணி 203 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி 58/4 ரன் எடுத்து, 145 ரன் பின்தங்கி இருந்தது. சந்திரசேகர் 3 விக்கெட் சாய்த்தார்.சத்தீஷ்கருக்கு எதிரான மற்றொரு போட்டியில் முதலில் களமிறங்கிய தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணிக்கு விமல் குமார் (54), கேப்டன் பிரதோஷ் (68), பாபா இந்திரஜித் (78) கைகொடுக்க, 266 ரன்னில் ஆல் அவுட்டானது. சத்தீஷ்கர் அணி 4/0 ரன் எடுத்திருந்தது.ருதுராஜ் சதம்இமாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணிக்கு அர்ஷின் (146), ருதுராஜ் (133) சதம் அடித்து உதவினர். 90 ஓவரில் 440 ரன்னில் ஆல் அவுட்டானது. பிரின்ஸ் தாகூர் 7 விக்கெட் சாய்த்தார்.ஹரியானாவுக்கு எதிராக முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு முஷீர் கான் (30), திவ்யான்ஷ் (46) ஜோடி துவக்கம் தந்தது. சர்பராஸ் கான் 111 ரன் விளாசினார். 90 ஓவரில் மும்பை அணி 346/9 ரன் எடுத்தது.