கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் 140 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, 408 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெஸ்ட் தொடரை 0-2 என மோசமாக இழந்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 260/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 549 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இந்தியா. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 27/2 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் (2), 'நைட்வாட்ச்மேன்' குல்தீப் யாதவ் (4) அவுட்டாகாமல் இருந்தனர். மீண்டும் சரிவுநேற்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 3வது ஓவரை வீசிய யான்சென் பந்தில் சுதர்சன், 'கேட்ச்' கொடுத்தார். அதிர்ஷ்டவசமாக 'நோ பால்' ஆனது. அடுத்த ஓவரில் ஹர்மார் பந்தில், குல்தீப் கொடுத்த வாய்ப்பை, மார்க்ரம் நழுவவிட்டார். இருவரும் 'கண்டம்' தப்பியதால் இந்திய அணியை மீட்டு, 'டிரா' செய்ய கைகொடுப்பர் என நம்பப்பட்டது.இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஹார்மர் சுழலில் குல்தீப் (5) போல்டானார். அடுத்த 3வது பந்தில் துருவ் (2), வந்த வேகத்தில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். பின் வந்த கேப்டன் ரிஷாப் பன்ட் (13), மஹாராஜ் சுழலில் தலா ஒரு 4, 6 என விளாசினார். கடைசியில் இவரும் ஹார்மர் சுழலில் சிக்கினார். உணவு இடைவேளைக்குப் பின் வீசப்பட்ட 5வது பந்தில் (முத்துசாமி), சுதர்சன் (14) அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் (16) இம்முறை நிலைக்கவில்லை.ஜடேஜா ஆறுதல்மஹாராஜ் பந்தில் சிக்சர் அடித்த ஜடேஜா, அரைசதம் கடந்தார். நிதிஷ் குமார், 'டக்' அவுட்டாகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். ஜடேஜா 54 ரன் எடுத்த நிலையில், 'ஸ்டம்டு' ஆனார். கடைசியில் சிராஜ் (0), யான்செனின் அசத்தலான 'கேட்ச்சில்' வெளியேறினார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 140 ரன்னில் சுருண்டது. 408 ரன்னில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, தொடரை 2-0 என கைப்பற்றியது. யான் சென் ஆட்டநாயகன் (93 ரன், 7 விக்.,), ஹார்மர் தொடர் நாயகன் (17 விக்.,) ஆகினர். 11 டெஸ்ட்முதல் 12 டெஸ்டில் அதிக வெற்றி பெற்றுத்தந்த கேப்டன்களில் தென் ஆப்ரிக்காவின் பவுமா (11) முதலிடம் பிடித்தார். ஸ்டோக்ஸ் (10, இங்கிலாந்து), லிண்ட்சே (10, ஆஸி.,) அடுத்து உள்ளனர்.17 விக்கெட்இந்திய மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க பவுலர் ஆனார் ஹார்மர் (17 விக்.,). இதற்கு முன் ஸ்டைன், 2008ல் 15 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.* இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய தென் ஆப்ரிக்க பவுலர்களில் ஸ்டைனை (26) முந்தினார் ஹார்மர் (4 போட்டி, 27 25 ஆண்டுக்குப் பின்...தென் ஆப்ரிக்க அணி கடந்த 2000ல் குரோன்யே தலைமையில் இந்திய மண்ணில் 2-0 என டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது 25 ஆண்டுக்குப் பின் மீண்டும் டெஸ்ட் தொடரை (2-0) கைப்பற்றியது.41 ஆண்டில்...இந்திய அணி 41 ஆண்டுக்குப் பின், சொந்தமண்ணில் அடுத்தடுத்த ஆண்டில் டெஸ்ட் தொடரை இழந்தது (2024ல் நியூசி., 2025ல் தெ.ஆப்.,). முன்னதாக 1983ல் வெஸ்ட் இண்டீஸ், 1984ல் இங்கிலாந்திடம் தோற்றது.201 ரன்தென் ஆப்ரிக்க தொடரில் நான்கு இன்னிங்சில் (189, 93, 201, 140), இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 201 ரன் தான். இது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் ஆனது. முன்னதாக 2002ல் (161, 121, 99,. 154) நியூசிலாந்துக்கு எதிராக, அதிகபட்சம் 161 ரன் எடுத்தது முதலிடத்தில் உள்ளது.408 ரன்கவுகாத்தியில் இந்திய அணி 408 ரன்னில் தோல்வியடைந்தது. டெஸ்ட் அரங்கில் ரன் அடிப்படையில் இந்திய அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. முன்னதாக 2004, நாக்பூர் டெஸ்டில், 342 ரன்னில் (ஆஸி.,) தோற்று இருந்தது.* தவிர, இந்திய மண்ணில் பெரிய வெற்றியை பதிவு செய்த அணியானது தென் ஆப்ரிக்கா. 'ஒயிட் வாஷ்'கடந்த 2000க்குப் பின் சொந்தமண்ணில் இந்திய அணி, மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை முழுமையாக ('ஒயிட் வாஷ்') இழந்தது. தென் ஆப்ரிக்கா (2000ல் 2-0, 2025ல் 2-0), நியூசிலாந்து (2024, 3-0) அணிகள் இதுபோல அசத்தின.சதம் இல்லைசொந்தமண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சதம் அடிக்காத நிகழ்வு, மூன்றாவது முறையாக (2025) நிகழ்ந்தது. முன்னதாக 1969, 1995ல் (எதிர்-நியூசி.,) இப்படி நடந்தது.மோசமான சராசரிதென் ஆப்ரிக்க தொடரில் இந்திய பேட்டர்களின் சராசரி 15.23 ரன். இதற்கு முன் 2002-03ல் நியூசிலாந்து தொடரில் 12.42 ஆக இருந்தது, முதலிடத்தில் உள்ளது.மார்க்ரம் உலக சாதனைஒரு டெஸ்டில் அதிக 'கேட்ச்' செய்த வீரர் என உலக சாதனை படைத்தார் தென் ஆப்ரிக்காவின் மார்க்ரம். இவர் கவுகாத்தியில் 9 'கேட்ச்' (முதல் இன்னிங்சில் 5, 2வது இன்னிங்சில் 4) செய்தார். இதற்கு முன் இந்தியாவின் ரகானே (2015ல் 8, எதிரணி-இலங்கை, காலே) முதலிடத்தில் இருந்தார்.மந்தமான ஆட்டம்டெஸ்டில் ஒரு இன்னிங்சில் குறைந்தது 100 பந்துக்கும் மேல் பேட்டிங் செய்து, குறைந்த ரன் எடுத்த இந்திய வீரர்களில் சாய் சுதர்சன் (139 பந்தில் 14 ரன், ஸ்டிரைக் ரேட் 10.07) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் யஷ்பால் சர்மா (157 பந்தில் 13 ரன், ஆஸி., 1981, அடிலெய்டு) உள்ளார்.ஐந்தாவது இடம்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2025-27) புள்ளிப்பட்டியலில் இந்திய அணி (48.15 வெற்றி சதவீதம்), 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இத்தொடரில் இந்தியா மொத்தம் 18 டெஸ்டில் பங்கேற்க உள்ளது. இதுவரை 9 டெஸ்டில், 4 வெற்றி, 4 தோல்வி, ஒரு 'டிரா' செய்தது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (100.00), தென் ஆப்ரிக்கா (75.00) உள்ளன. மீதமுள்ள 9 டெஸ்டில் (2 இலங்கை, 2 நியூசி., 5 ஆஸி.,) சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே உலக டெஸ்ட் பைனல் குறித்து யோசிக்கலாம். ரிஷாப் புலம்பல்இந்திய அணி கேப்டன் ரிஷாப் பன்ட் கூறுகையில்,'' கிரிக்கெட்டில் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. சொந்தமண் அல்லது வெளிநாடு என எங்கு விளையாடினாலும், அர்ப்பணிப்பு உணர்வு, கூடுதல் முயற்சி தேவை. ஒரு அணியாக, போட்டியில் கிடைக்கும் சில தருணங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை சரியாக செய்யாததால் தொடரை இழந்துள்ளோம்,'' என்றார்.காம்பிர் ஆதங்கம்இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் கூறுகையில்,'' இந்தியாவில் கிரிக்கெட் தான் முக்கியமானது. நான் முக்கியமில்லை. டெஸ்ட் அணி பயிற்சியாளர் பதவிக்கு நான், சரியானவர் தானா என்பதை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தான் முடிவு செய்யும். இந்த இளம் அணியை கொண்டு தான் இங்கிலாந்தில் தொடரை 'டிரா' செய்தேன். சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை வென்றதும் எனது பயிற்சியில் தான். ஆனால் நியூசிலாந்து தொடர் தோல்வி குறித்து பேசுவதால், இதையெல்லாம் விரைவில் மறந்து விடுகிறீர்கள். இப்போதுள்ள அணி அனுபவம் குறைந்தது. அவர்களால் முடிந்தவரை அனைத்தையும் செய்கின்றனர். தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.