| ADDED : பிப் 01, 2024 08:10 PM
ஆமதாபாத்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின் அரைசதம் விளாச இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு சுருண்டது.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 'ஏ' அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று ஆமதாபாத்தில் மூன்றாவது டெஸ்ட் துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (0), சாய் சுதர்சன் (7) ஏமாற்றினர். திலக் வர்மா (22) நிலைக்கவில்லை. ரிங்கு சிங் (0), குமார் குஷாக்ரா (4) சோபிக்கவில்லை. இந்தியா 'ஏ' அணி 82 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஆறுாவது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது படிக்கல் (65) அவுட்டானார். சரண்ஷ் சிங் (64) நம்பிக்கை தந்தார்.ஷாம்ஸ் முலானி (11), ஆகாஷ் தீப் (7), அர்ஷ்தீப் சிங் (0) ஏமாற்ற இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 192 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் மாத்யூ பாட்ஸ் 6, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆட்டநேர முடிவில் 98/1 ரன் எடுத்திருந்தது. லீஸ் (48), பிரைஸ் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா 'ஏ' சார்பில் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.